மதுரையில் தெருக்களில் ஓடும் பாதாள சாக்கடை கழிவு நீர் தேங்கி காணப்படுகிறது. பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் சாக்கடையில் நடந்து செல்வதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 58., கோமஸ்பாளையத்தில் உள்ள தெருக்களில் பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலை முழுவதும் தேங்கி காணப்பட்டு துர்நாற்றம் வீசி வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்து தெருக்களில் தேங்கியிருக்கும் கழிவு நீர் அங்குள்ள வீடுகளுக்குள் செல்வதால் மனித கழிவுகள் குடியிருப்புகளுக்குள் சூழும் அவலம் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
குறிப்பாக காலை பள்ளிகளுக்கு செல்லும் மாணவ, மாணவியர்கள் ஆபத்தான முறையில் கழிவு நீரை கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதால் நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதாகவும் அச்சம் தெரிவிக்கின்றனர். மதுரை மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
