உசிலம்பட்டி அருகே குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள சாக்கடை கழிவு நீரால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 14வது வார்டு கருக்கட்டான்பட்டி கிராமத்தில் 300க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த கிராமத்திலிருந்து வெளியேறும் சாக்கடை கழிவு நீர் செல்ல வழி இல்லாமல் கிராமத்தின் மையப்பகுதியான மாரியம்மன் கோவில் முன்பு குளம் போல தேங்கி காணப்படுகிறது.
குடியிருப்பு பகுதியின் நடுவே தேங்கியுள்ள இந்த சாக்கடை கழிவு நீரீல் உருவாகும் கொசுக்களின் மூலம் அடிக்கடி காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் ஏற்பட்டு வருவதாகவும், நோய் தொற்று பரவுவதை தடுக்க முறையான வடிகால் வசதிகளை அமைத்து தர வேண்டும் என உசிலம்பட்டி நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
மாவட்ட நிர்வாகம் நேரில் ஆய்வு செய்து சாக்கடை நீர் தேங்கி நோய் தொற்று ஏற்படாத வண்ணம் பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
