

பல மாதங்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகளை மீண்டும் ‘கும்மாளம்’ போட வைத்த கும்பக்கரை அருவியில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருகிறது. விடுமுறை நாளான இன்று (பிப். 20) ஞாயிறுக்கிழமை வழக்கத்திற்கு மாறாக பிற மாவட்ட மக்கள் குடும்பத்தோடு வந்திருந்து குளித்து மகிழ்ந்தனர்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் ரம்மியமான சூழ்நிலையில் அமைந்துள்ளது, கும்பக்கரை அருவி. கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்யும் மழையால் இந்த அருவிக்கு தண்ணீர் வருகிறது. வழிநெடுக பல்வேறு மூலிகை செடிகளை தொட்டு தழுவியும், பாறைகள் சூழ்ந்த பள்ளத்தாக்குகளை கடந்து ஆர்ப்பரித்து வருவதால் வருவதால், இந்த அருவியை பார்பதற்கும், அதில் குளிப்பதற்கும் மக்கள் பெரிதும் விரும்புவர். தேனி மாவட்ட மக்கள் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்லும் பெரும்பாலானோர் இங்கு வந்து செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அருவியில் குழந்தைகள் கும்மாளம் போடுவதற்கு தனி இடமே உள்ளது. இங்கு பெண்கள் நீச்சல் அடித்து மகிழ நீச்சல் தொட்டி போன்ற சமதள பள்ளத்தாக்கும் அமைந்துள்ளது. இதில் இடுப்பளவு மட்டுமே தண்ணீர் தேங்கி நிற்கும். இந்த பள்ளத்தாக்கை அடுத்து, ஆடவர்கள் குளிக்கும் மெயின் அருவி உள்ளது. ஒரே நேரத்தில் 10க்கும் மேற்பட்டோர் குளிப்பதால், அருவி சத்தத்தை விட இங்கு கும்மாளம் போடுபவர்களின் கத்தல் அதிகமாக கேட்கும். குளிக்க மனமில்லாமல் வருபவர்களை கூட இந்த அருவி தன் வசப்படுத்தி, அவர்களை ஈரத்துணியுடன் அனுப்பிவிடும். காலை முதல் மாலை வரை இப்பகுதியில் ரம்மியமான சூழல் காணப்படும். இங்கு வரும் பெரும்பாலான இளைஞர்கள் செல்பி மோகத்தில் அங்குமிங்கும் சுற்றித் திரிவதை காணமுடியும். இப்படி சுற்றுலா பயணிகளை குஷிப் படுத்தி வந்த, இந்த கும்பக்கரை அருவி கொரோனா காலகட்டத்தில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக அனுமதி மறுக்கப்பட்டதால், சுற்றுலாத் தலமே வெறிச்சோடி காணப்பட்டது. கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதையடுத்து, கும்பக்கரை அருவி மீண்டும் புத்துணர்வு அடைந்தது. வனத்துறை குளிக்க அனுமதி அளித்ததால், சுற்றுலா பயணிகள் படையெடுப்பு அதிகரித்துள்ளது. பெரியவர்களுக்கு 30, சிறியவர்களுக்கு 20 ரூபாய் என, நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது கடந்தாண்டை விட இரு மடங்கு கட்டண விலை உயர்வால் சுற்றுலா பயணிகள் கவலையடைந்து உள்ளனர். இதை குறைக்க வேண்டுமென, அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். விடுமுறை நாளான இன்று பிற மாவட்ட சுற்றுலா பயணிகள் வருகையால் அருவி திக்கு… முக்காடி காணப்பட்டது.
