• Fri. Apr 26th, 2024

தேனி: வைரலாகும் பைக் திருடன் வாக்கு மூலம்

தவறு செய்து மாட்டிக் கொண்டாலும், போலீசாரை திசை திருப்பும் வகையில் எந்தவித பதட்டமுமின்றி அழகிய தமிழில் வர்ணனையுடன் பேசும் பைக் திருடனின் வாக்கு மூலம் பலரையும் ரசிக்கும் படி இருந்ததால், அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே எழுமலையைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் 31. போகிற போக்கில் ‘ஜாலி’ க்காக டூவீலர் திருடிய இவர் எப்படியோ தேனி பழனிசெட்டிபட்டி போலீசாரிடம் கடந்த 19ல், மாட்டிக் கொண்டார். ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவரின் வாக்கு மூலத்தை அலைபேசியில் ‘வீடியோ’ வாக போலீசார் பதிவு செய்தனர். அந்த வீடியோ ஏண்டா எடுத்தோம், என நினைக்கும் அளவிற்கு போலீசாரை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. காரணம் அந்த வீடியோ பதிவு சமூக வலைதளத்தில், காட்டுத் தீ போல பரவி வைரலாகி வருகிறது.

அதில் பைக் திருடன் பேசியதாவது: ஒரு வீட்டில், திறந்த வீட்டில் நாய் நுழைந்ததைப் போல நான் நுழைந்தேன். அந்த வீடு ரம்யமாக காட்சியளித்தது. எழில்மிகு ரசனைக்கு உரிய சிற்பிகள் மூலம் வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆசையைத் தூண்டும் விதமாக தவறு செய்வதற்கு வாய்ப்பளிப்பது போலவும் டூவீலர் சாவி தொங்கிக் கொண்டிருந்தது. வண்டியை எடுத்துக் கொண்டு கஞ்சா வாங்க சென்றேன். ஆண்டிபட்டியை கடந்ததும், டூவீலர் செயின் அவிழ்ந்ததால் அங்கேயே நிறுத்திவிட்டு வந்தேன். பல அரசியல் பிரமுகர்களுக்கும் கவிதை எழுதி அனுப்பி உள்ளேன். நான் போதை அடிமை அல்ல. சமூக பொறுப்புணர்வு எனக்கு உள்ளது. தொடர்ந்து தனது குடும்ப விபரங்களை ஆங்கிலத்தில் தெரிவித்தார். அதற்கு இன்ஸ்பெக்டர் மதன கலா நன்றி என்று கூறும் வகையில் உள்ளது.

இன்னொரு வீடியோவில், ‘ப்ரண்ட்ஸ் ஆப் போலீசில்’ சேர்ந்துள்ளேன். கோடாங்கிபட்டியில் கஞ்சா வாங்க வந்தேன் என்று தொடர்ந்து பல்வேறு போதைப் பொருள்களை அடுத்தடுத்து கூறியவர், திடீரென ‘சப்ஜெட்டை’ மாற்றி நிலவேம்பு கசாயம், நெல்லிக்காய், திப்பிலி என்று சொல்லிக் கொண்டே செல்ல வீடியோ அத்துடன் திடீரென ‘ஸ்டாப்’ ஆனது.

இந்த இரண்டு வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. போலீசார் கூறுகையில், ” மனப்பிரம்பை பிடித்தவன் போல பேசுகிறான். யாராவது டூவீலரை சாவியுடன் நிறுத்தி இருந்தால் எடுத்து எங்காவது செல்வது புரோட்டா சாப்பிடுவது, காசில்லாமல் டூவீலரை கொடுப்பது, பிறகு இன்னொரு வண்டியை திருடிக் கொண்டு இலக்கில்லாமல் செல்வது என்று இவரது செயல் உள்ளது. எச்சரித்து அனுப்பி உள்ளோம்” என்றனர்.
இவரின் பேச்சை ரசித்து சிரிப்பது, நன்றி கூறுவது என்று போலீசாரின் செயலுக்கு சமூக வலைதளங்களில் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். உண்மையான குற்றவாளியை பிடிக்க முடியாவிட்டாலும், இவரையாவது பிடித்து எப்படியும் ‘கேஸ்’ போட்டுவிடலாம் என கங்கணம் கட்டிய போலீசாருக்கு கடைசியில் பிம்பிளிக்கி…. பிளாப்பி ஆன கதையாகி போனது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *