• Sat. Nov 8th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

அஜித்தின் வலிமை வைத்து கொள்ளையடிக்கும் திரையரங்குகள்

அஜித்தின் வலிமை இன்று வெளியாகியுள்ள நிலையில் திரையரங்குகள் தங்களது வழக்கமான கட்டணக் கொள்ளையை ஜரூராக நடத்தி வருகின்றன.

ரஜினி, விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது திரையரங்குகள் கொள்ளை கூடாரங்களாக மாறும். இந்த நடிகர்களின் ரசிகர்கள் முதல் நாள் முதல் காட்சி தங்கள் தலைவரின் படத்தை பார்க்க ஆவலாக இருப்பார்கள். அந்த ஆர்வத்தை காசாக்குவது தான் திரையரங்குகளின் ஒரே குறிக்கோள். வலிமையும் அதற்கு விதிவிலக்கல்ல.

இரண்டு வருடங்களுக்கு பிறகு திரையரங்கில் அஜித்தின் திரைப்படம் ஒன்று வெளியாகிறது என்பதால் ரசிகர்கள் வலிமையை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். இன்று அதிகாலை காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் ரசிகர் மன்றங்களுக்கு அளிக்கப்பட்டன. இதில் இரண்டு வகையான கொள்ளைகள் நடந்துள்ளது. திரையரங்குகள் சராசரியாக ஒரு டிக்கெட்டுக்கு 300 ரூபாய் நிர்ணயித்து இந்த டிக்கெட்டுகளை ரசிகர்களுக்கு அதாவது ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு அளித்துள்ளனர். இந்த நிர்வாகிகள் இதனை ரசிகர்களுக்கு 500 முதல் 1500 ரூபாய் வரை விலை வைத்து விற்றிருக்கிறார்கள். இது சிறப்பு காட்சிகளுக்கான திரையிடலில் நடந்த கொள்ளை. அஜித் மன்றங்களை கலைத்த பிறகும் இந்த கொள்ளை தொடர்கிறது.

சிறப்பு காட்சிகளுக்கு பிறகு நடக்கும் காட்சிகளின் மொத்த கட்டண கொள்ளையும் திரையரங்குகளை சாரும். தமிழகத்தில் உள்ள 99 சதவீத திரையரங்குகள் வலிமை படத்துக்கான கட்டணத்தை பலமடங்கு உயர்த்தியுள்ளன. அரசு நிர்ணயித்த கட்டணம் 150 ரூபாய் என்றால் இவர்கள் 300 ரூபாய் வைத்து டிக்கெட்டுகளை விற்கிறார்கள். அரசு முத்திரை இல்லாத டிக்கெட்டுகளே திரையரங்குகளில் தரப்படுகின்றன. இதன் மூலம் பல சட்ட மீறல்கள் நடக்கின்றன.