• Sun. Dec 1st, 2024

மனநிறைவு பெற வழி

Byவிஷா

Nov 17, 2021

ஒரு ஊரில் செல்வந்தன் ஒருவன் தன் தொழிலால் நிறைய செல்வங்களை சேகரித்து வாழ்ந்து வந்தான். அவனிடம் நிறைய வேலையாட்கள் வேலை செய்து வருகின்றனர். என்ன தான் அவனிடம் செல்வம் இருந்தாலும், அவனது மனம் மட்டும் முழுமையடையவில்லை.


அதற்காக அவன் ஒரு துறவியை சந்தித்து தன் பிரச்சனையை சொல்லி, அதற்கான காரணம் மற்றும் மனநிறைவு பெறுவதற்கான வழியைத் தெரிந்து கொள்ள விரும்பினான். அதேப்போல் ஒரு துறவியை சந்தித்து, எல்லாவற்றையும் கூறினான்.


அவனது கேள்விக்கான விடையை தெளிவுபடுத்த, துறவி அவனை ஒரு மலை அடிவாரத்திற்கு அழைத்துச் சென்று, மூன்று கனமான கற்களைக் கொடுத்து, தூக்கிவரச் சொன்னார். அவனும் தூக்கினான். ஆனால் அவனால் நடக்க முடியவில்லை. அதனால், துறவி அதில் ஒரு கல்லை மட்டும் தூக்கிப்போட்டு வரச் சொன்னார். அவனும் தூக்கிப் போட்டு, இரண்டு கற்களை தூக்கிக் கொண்டு சென்றான்.


சிறிது தூரம் கழித்து, அவனால் அதையும் தூக்க முடியவில்லை, ஆகவே அதில் ஒன்றை தூக்கிப் போடச் சொன்னார் துறவி. அவனும் தூக்கிப் போட்டு நடக்க ஆரம்பித்தான்.
மீண்டும் சிறிது தூரம் சென்றதும் அவனால் முடியவில்லை, துறவியும் அதை தூக்கிப் போட்டு நடக்கச் சொன்னார். பின்னர் அவனும் எந்த சிரமமும் இல்லாமல் நடந்தான். பின் இருவரும் மலை உச்சியை அடைந்தனர்.


அப்போது துறவி அவனிடம் “உன்னால் எப்படி அந்த கற்களின் கனத்தை தாங்க முடியாமல் திணறினாயோ, அதேபோல் தான் உன்னால் செல்வத்தை வைத்துக் கொண்டு நிம்மதியாக இருக்க முடியவில்லை.


எவ்வாறு ஒவ்வொரு கல்லாக தூக்கிப் போட்டதால், நடக்க முடிந்ததோ, அதேப்போல் தான் நீ உன்னிடம் இருக்கும் செல்வத்தையும் அனைவருக்கும் கொடுத்து வந்தால், அவர்களது ஆசிர்வாதத்தால், உனக்கு ஒரு மனநிறைவு கிடைத்திருக்கும். எவ்வாறு மலை உச்சியை எந்த ஒரு கனமும் இல்லாமல் நிம்மதியாக அடைந்தாயோ, அதேப்போல் நீயும் நீண்ட நாட்கள் எந்த ஒரு மனக்குறையும் இன்றி நிம்மதியுடன் இருப்பாய்” என்று சொன்னார். அன்று முதல் அவனும் அனைவருக்கும் வாரி வழங்கி வாழ்ந்து வந்து, மன நிம்மதி அடைந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *