திருப்பத்தூர் அருகே ஒரு சிறு கிராமத்தில் பிறந்து, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, மருத்துவ படிப்புக்கு சென்று, பெற்றோரின் கனவை நினைவாக்கிய மகள். கண்ணீர் விட்டு கொண்டாடிய குடும்பம்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஆத்தங்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முத்தையா சுதா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. மூத்த மகள் லட்சுமி நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்பு படிக்க உள்ளார்.
திருப்பத்தூர் அருகே உள்ள பல கிராமங்களில் பொதுவாக பெண்கள் 12ம் வகுப்பு, 10ம் வகுப்பு முடித்தவுடன் திருமணம் செய்து வைத்து விடுவது வழக்கம். அதேபோன்று லட்சுமி பெற்றோர்களின் உறவினர்களும் படித்தது போதும் பிள்ளைக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கலாம் என கூறிய போது.., தனது ஆசையை தனது தந்தை, தாயிடம் கூறியதோடு தனது தாய்மாமா சுரேஷ்குமாரிடமும் கூறிவந்துள்ளார் லட்சுமி. இதனையடுத்து மூவரும் லட்சுமியை மருத்துவராக பார்க்க வேண்டும் என எண்ணி படிக்க வைத்துள்ளனர். இந்நிலையில் கடுமையாக போராடி படித்த லட்சுமி முதலாவதாக எழுதிய நீட் தேர்வில் வீட்டில் இருந்து படித்த போது 354/369 எடுத்து 15 மதிப்பெண் குறைவாக பெற்று மருத்துவ படிப்புக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. பின்பு மீண்டும் அவரது தந்தை சற்று யோசிக்க, தாய் சுதா கண்ணீரோடு கணவரிடம் போராடி மகளுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை பெற்று தந்தார். இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய லட்சுமி 509 மதிப்பெண் எடுத்தால் போதும் என்ற நிலையில் 555 மதிப்பெண் எடுத்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது. இவரது கிராமத்தில் மருத்துவ படிப்பிற்கு செல்லும் முதல் நபர் இவர்தான். தான் படிக்க வேண்டும் என எண்ணிய போது தனது குடும்பம் தனக்கு ஒத்துழைப்பு தரவில்லை, என தாய் கண்ணீரோடு கூறிய நிலையில், மகள் மருத்துவ படிப்பு படிக்க இருப்பதால் அவரது குடும்பம் மற்றும் கிராம மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு சிறு கிராமத்தில் பிறந்து, அரசுப் பள்ளியில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்பில் சேர உள்ள லெட்சுமிக்கு அவரது குடும்பம் இனிப்புகளை ஊட்டி பாராட்டினர். இந்த தகவல் அறிந்து கிராம மக்கள் அனைவரும் லட்சுமி இல்லத்திற்கு சென்று அவரை பாராட்டி வருகின்றனர்.