தாம்பரம் கோட்டத்திற்கு உட்பட்ட வருவாய் துறையினர் தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் உங்களுடன் ஸ்டாலின் திட்டப்பணிகளை முற்றாக புறக்கணித்து மாவட்ட தலைவர்கள் முதல் கிராம அலுவலக உதவியாளர்கள் வரை காத்திருப்பு போராட்டத்தில் மாலை 3 மணியிலிருந்து இரவு 8 மணி வரை ஈடுபட்டனர்.

இக்காத்திருப்பு போராட்டத்தில் ஒன்பது அம்ச கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்பொழுது உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்களை முடிவு செய்திட போதிய கால அவகாசம் அளித்திட வேண்டும். ஆய்வு கூட்டம் என்ற பெயரில் அளவு கடந்த பணி நெருக்கடிகள் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும். இத்திட்டத்தின் முகாம்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்.
இத்திட்டத்தை செயல்படுத்த கூடுதல் பணியிடங்கள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த வேண்டும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை நில அளவைத் துறையில் பணிபுரிந்து வரும் அனைத்து நிலையான அலுவலர்களின் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாக்க குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கிடவும் சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு உடனடியாக இயற்ற வேண்டுமென உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கையை முன்னிறுத்தி கோஷங்கள் எழுப்பி தமிழக அரசை கேட்டுக் கொண்டனர்.

இதில் சுமார் 30க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் உட்பட கிராம அலுவலர் முதல் வருவாய் ஆய்வாளர் துணை தாசில்தார், தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு கோரிக்கை வைத்தனர்.
காத்திருப்பு போராட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட்டதால் அலுவலகங்கள் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.