அறத்தோடு போராடுவது தான் போராட்டம், நேர்மையான தமிழ் தேசியத்தை சீமான் பேச வேண்டும். நாம் தமிழர் கட்சியின் பேச்சு தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்துகிறது என இயக்குனர் கௌதமன் தெரிவித்துள்ளார்.
தமிழ் பேரரசு கட்சித் தலைவரும் திரைப்பட இயக்குனருமான கௌதமன் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது,
“தமிழகத்தில் சமூகநீதி திட்டமிட்டு மறுக்கப்படுவதோடு அபகரிக்கப்படுகிறது. தமிழகத்தின் வேலை தமிழர்களுக்கே என்பதோடு தமிழ் மொழியை தாய்மொழியாக பேசக் கூடியவர்களுக்கே என்று சட்டமாக திமுக அரசு உடனடியாக கொண்டுவர வேண்டும். தமிழ் தேசியம் என்ற பெயரில் சில கட்சிகள் போலியான அரசியலை நடத்துகின்றன.
மத்திய, மாநில அரசுகள் உடனடியாக சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும். சாதி வாரி கணக்கெடுப்பிற்குப் பின் இட ஒதுக்கீடு அதிகமாக இருந்தால் திரும்ப எடுத்துக் கொள்ளுங்கள், இட ஒதுக்கீட்டை தாமததித்தால் தமிழக அரசுக்கு எதிராக எந்த மாதிரியான போராட்டங்களை முன்னெடுப்போம் என அரசுக்கு தெரியும், காங்கிரஸ் கட்சி தமிழர் கட்சிகளை பார்த்து குற்றம் சொல்லும் அளவிற்கு நேர்மையானவர்கள் தகுதியானவர்கள் அல்ல.

சீமான் தமிழர் அறத்தோடு நடந்துகொள்ள வேண்டும், நாம் தமிழர் கட்சியின் பேச்சு தமிழர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்துகிறது. வன்மத்தை உருவாக்குவதால் தமிழ் தேசியம் வெல்லாது என உரிமையோடு சீமானுக்கு சொல்கிறேன். அறத்தோடு போராடுவது தான் போராட்டம், நேர்மையான தமிழ் தேசியத்தை சீமான் பேச வேண்டும், அனைத்து சாதியினர் அர்ச்சகர் திட்டத்தை வரவேற்கிறோம், உரிய இட ஒதுக்கீட்டை வழங்கினால் தான் அனைவருக்குமான சமூக நீதி நிலைநிறுத்தப்படும், தமிழகத்தில் 80 லட்சம் பேர் வேலையை இழந்துள்ளனர்.
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினரின் வெற்றிக்கு வாழ்த்துகள். தமிழ்மொழியை தாய்மொழியாக கொண்ட நடிகர்கள், தமிழர்கள் அரசியலுக்கு வர வேண்டும். நடிகர்களாக இருந்தாலும், ஒழுக்கத்தோடு, நேர்மையோடு இருப்பவராக இருக்க வேண்டும். நாட்டிற்காக எதையுமே வாங்கத் தெரியாமல், விற்க மட்டுமே தெரியும் என்ற எண்ணத்தில் இருக்கும் பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும்” என்று பல்வேறு கருத்துக்களை முன் வைத்தார்.