கன்னியாகுமரியில் மாலை மழை நேரத்தில் வள்ளுவர் சிலை வளாகத்தில் திருக்குறள் பரப்புரை மையமாக விளங்கும் , வள்ளுவர் கோட்டத்தில் அமைந்துள்ள குறளங்காடி திறப்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் கன்னியாகுமரியில் திருக்குறள் முற்றோதல் பயிற்றுவிக்கும் குறளகம் அமைப்பின் சார்பாக திருக்குறள் முற்றோதல் முடித்த மாணவர்கள் குழுவாக வந்து முற்றோதல் செய்து தொடங்கிவைக்க திட்டமிடப்பட்டது.

அதையொட்டி குறளகம் மாணவர்கள் 19 பேருடன் பெற்றோர்களும் சேர்த்து சுமார் 45 பேர் நேரில் பங்கேற்று முற்றோதல் செய்தனர்.
இந்நிகழ்வில் கன்னியாகுமரியில் வசிக்கும் திருக்குறள் உரையாசிரியர்கள் திருக்குறள் ஆய்வாளர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் . இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து முற்றோதல் மாணாக்கர்களுக்கும் பரிசுகளும் சான்றிதழும் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டனர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மிகச் சிறப்பாக இயங்கி வரும் குறளங்காடி , கன்னியாகுமரி சிலையில் தனது இரண்டாவது கிளையை இன்று திறந்துள்ளது.

வள்ளுவத்தை வாழ்வியலாக்குவோம் , திருக்குறள் கற்போம் ! குறள் வழி நிற்போம்! என்ற முழக்கத்துடன் இயங்கும் குறளங்காடி உலக அமைதிக்காக படைக்கப்பட்ட திருக்குறளை உலகெங்கும் வாழ்வியலாகக் கொண்டு செல்லும் நோக்கில் 85 க்கும் மேற்பட்ட பயன்பாட்டுப் பொருள்களில் திருக்குறள் கருத்துகள் பதித்து இளைஞர்களை ஈர்க்கும் வகையிலும், மாணவர்களை திருக்குறள் பக்கம் கவனம் செலுத்தி அமைதியான சமுதாயம் அமைந்திட முயற்சி மேற்கொண்டுள்ளது.
திருக்குறள் ஆய்வாளர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள குறளங்காடி கன்னியாகுமரியின் வள்ளுவர் சிலையிலிருந்து திருக்குறளை அந்த மாவட்டத்திலும், அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்வில் கன்னியாகுமரியில் குறளகம் நடத்தி 60 க்கும் மேற்பட்ட மாணவர்களை திருக்குறள் முற்றோதல் செய்ய வைத்து அரசின் முற்றோதல் பரிசுத்தொகை பெற்றவைத்த தமிழ்க்குழவி விசுவநாதன் கன்னியாகுமரி குறளங்காடி மேலாளர் தென்மொழி நாற்றேவன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் குறளங்காடி நிறுவனர் வலைத்தமிழ் பார்த்தசாரதி நேரில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி, இந்த அருமையான திருக்குறள் பரப்புரைக்கு வாய்ப்பளித்த சுற்றுலாத் துறைக்கு நன்றி தெரிவித்தார்..








