• Sat. May 4th, 2024

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளும், அதன் சிறப்புகளும்..!

Byவிஷா

Nov 18, 2023

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில், ஒவ்வொரு படைவீடும் தனிச்சிறப்புகளைக் கொண்டுள்ளது.

முதல்படை வீடு:

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடு என்பது திருப்பரங்குன்றம். இங்கு மலைவடிவில் சிவபெருமான் அருள்புரிகிறார்.  முருகன் சூரபத்மனை போரில் வென்ற பிறகு இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்கு மணமுடித்து வைக்கிறார். அதனால் இங்கு முருகன் தெய்வானையுடன் மணக்கோலத்தில்  அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். இது சிறப்பானது.

இரண்டாம் படைவீடு:

முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் உலகளவில் பிரசித்தி பெற்றது. இந்த தலம் கடலோரத்தில் ரம்மியமாய் அமைந்துள்ளது.  இந்த திருச்செந்தூர் திருச்சீரலைவாய் என்றும் சூரபத்மனை அழித்த ஜெயந்தன் என்பதால் ஜயந்திபுரம் என்றும் அழைக்கப்படுவதுண்டு. 

கந்த புராணத்தில் முருகன் சூரபதம்னை அழித்த இடம் திருச்செந்தூர் என்று கூறப்படுவதால் இந்த இடம் குரு ஸ்தலமாக விளங்குகிறது.

மூன்றாம் படைவீடு

முருகப்பெருமானின் மூன்றாம் படைவீடு பழநி.   பழநி முருகர் சிலை மிக மிக பிரசித்தி பெற்றது. இந்த சிலையை வடிவமைத்தவர் போகர் என்னும் சித்தர். நவபாஷாணத்தால் இச்சிலை உருவாக்கப்பட்டுள்ளது சிறப்புமிக்கது.  சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய இடம் என்று சொல்லப்படுகிறது.

உலகை சுற்றி ஞானப்பழத்தை பெரும் போட்டியில் பிள்ளையாருடன் ஏற்பட்ட கோபத்தால் இங்கு இருக்கும் முருகன் தண்டாயுதபாணியாக காட்சி தருகிறார். பழநி பஞ்சாமிர்தம் என்பது தனிச் சிறப்பானது. இங்கு பால், பஞ்சாமிர்தம் எல்லாமே நோய் தீர்க்கும் மருந்தாக செயல்படுவதாக பக்தர்கள் கூறுகிறார்கள்.
நான்காம் படைவீடு:

நான்காம் படைவீடு என்பது சுவாமிமலை ஆகும். தகப்பனுக்கு பாடம் சொன்ன சுவாமி. பிள்ளையின் வாயால் பிரணவ மந்திரத்தின் பொருளை கேட்க  பிள்ளையை குருவாக ஏற்று சிவபெருமான் சீடனாக அமர்ந்த இடம் இந்த சுவாமி மலை. அதனால் இவர் சிவகுருநாதன் என்று அழைக்கப்படுகிறார். 

இவரைச் சென்று வணங்கினால் அறிவாற்றல் பெருகும் என்பது ஐதிகம். குழந்தைகள் கல்வி கேள்வியில் சிறந்து விளங்க குழந்தைகளை அழைத்து சென்று வணங்குவது சிறப்பு.
ஐந்தாம் படைவீடு:

முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடு திருத்தணி.  சூரபத்மனை வதம் செய்த பிறகும் கோபம் தணியாத முருகப்பெருமான்  திருத்தணிக்கு சென்று  தன் கோபத்தை தணித்து கொண்டதாக ஐதிகம்.  அங்கு கோபத்தை தணிகை செய்ததால் அது திருத்தணியை ஆயிற்று. மேலும் இங்கு தான் தமையன் பிள்ளையாரின் உதவியுடன் வேடர் குலத்தில் பிறந்த வள்ளியை திருமணம் செய்தது என்கிறது வரலாறு.

அருணகிரிநாதர் மற்றும் , முத்துசாமி தீட்சிதரால் பாடல் பெற்ற தலம்

ஆறாம் படைவீடு:

முருகப்பெருமானின் வீடுகளில் இறுதியாக வரும் வீடு ஆறுபடை வீடு அழகர் மலை. பழமுதிர்ச்சோலை. சோலைவனம் ஆகும்.
சுட்டப்பழம் வேண்டுமா.. சுடாத பழம் வேண்டுமா என்று ஒளவையிடம் கேட்ட சுட்டிப்பையன் யார் என்பதை ஒளவை அறிந்து கொண்ட இடம் இதுதான்.
இதன் மூலம் உலக வாழ்க்கைக்கு கல்வி அறிவுடன் இறையருள் என்னும் மெய் அறிவு அவசியம் என்பதை உணர்த்திய இடமும் இதுதான். சிறுவனாய் ஒளவைக்கும், வயோதிகனாய் நக்கீரனுக்கும் காட்சியளித்த இடம் இந்த பழமுதிர்ச்சோலையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *