திண்டுக்கல்லில் தலைமை தபால் நிலைய உதவி அதிகாரி வீட்டில் 25 பவுன் நகை கொள்ளை தடயங்களை தெரியாமல் இருப்பதற்காக வீட்டிற்கு தீ வைத்து விட்டு சென்ற கொள்ளையர்கள் ரூ 10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
திண்டுக்கல் தலைமை தபால் நிலைய உதவி அதிகாரியாக மணிமாறன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சொந்தமான வீடு திருநகரில் உள்ளது. இவரது மகன் அரவிந்தன் என்பவர், திண்டுக்கல்லை அடுத்துள்ள நந்தவனப்பட்டியில் வசித்து வருகிறார். மணிமாறன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் தங்களது வீட்டை பூட்டி விட்டு மகன் வீட்டிற்கு சென்று அங்கேயே தங்கி உள்ளனர். வீடு பூட்டப்பட்டு இருப்பதை அறிந்த கொள்ளையர்கள் நேற்று இரவு மாடி வழியாக வந்து பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 25 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர். மேலும் கொள்ளை தொடர்பான தடயங்கள் கிடைக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக வீட்டில் உள்ள இரண்டு பெட்ரூம் மற்றும் ஹால் அகியவற்றிக்கு தீ வைத்து எரித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று உள்ளனர். இதனால் பீரோவில் இருந்த பட்டுப் புடவைகள் மற்றும் சாதாரண புடவைகள், அரவிந்தன் மற்றும் அவரது மனைவி கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட், வீட்டு பத்திரங்கள் என ஏராளமான பொருட்கள் எரிந்து நாசமானது.
இதனிடையே மணிமாறன் வீட்டில் இருந்து புகை வருவதைக் கண்ட பக்கத்து வீட்டுக்காரர் அரவிந்தனுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வீட்டில் இருந்து புகை வருவதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரவிந்தன் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது அனைத்து பொருட்களும் எரிந்து இருப்பது மேலும் பீரோவில் இருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
இது தொடர்பாக திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்துக்கும் தீயணைப்பு துறையினருக்கும் அரவிந்தன் தகவல் தெரிவித்தார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் புகையை கட்டுப்படுத்தினர்.
கொள்ளை தொடர்பாக சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் அருகில் உள்ள ரயில்வே கேட் வரை சென்று அங்கேயே நின்றுவிட்டது. மேலும் குற்றவாளிகளின் கைரேகைகளை பதிவு செய்ய கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு குற்றவாளிகள் கைரேகைகள் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
25 பவுன் நகை கொள்ளை போனது உடன் வீட்டில் ரூ 10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.