• Thu. Dec 11th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

மாயமான 12ம் வகுப்பு மாணவியை தேர்வு எழுத வைத்த காவல் ஆய்வாளர்…

BySeenu

Mar 4, 2025

கோவை, சூலூர் அருகே மாயமான பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை தேர்வு எழுத வைத்த காவல் ஆய்வாளரின் செயலை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

கோவை அருகே சூலூரை அடுத்த பாப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த கணவனை இழந்த பெண், தனது பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மகள் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு, அந்தப் பெண் தனது மகன் மற்றும் மகளுடன் மாயமானார். இது தொடர்பாக சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் அவர்களைத் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று காலை 9.45 மணியளவில் அந்தப் பெண் தனது மகன் மற்றும் மகளுடன் சூலூர் காவல் நிலையத்திற்கு வந்தார். விசாரணையின் போது, அந்தப் பெண்ணின் மகள் பனிரெண்டாம் வகுப்பு படிப்பதை அறிந்த காவல் ஆய்வாளர் லெனின் அப்பாதுரை, “நடவடிக்கை கட்டாயம் எடுக்கிறோம்.

அதற்கு முன் உங்கள் மகளுக்கு பொதுதேர்வு தொடங்குகிறது. அவர் தேர்வு எழுத அனுப்பி வையுங்கள்” என்று கூறினார். அதற்குத் அந்தப் பெண்ணும் சம்மதிக்க, ஒரு பெண் காவலரை மாணவியுடன் அனுப்பி தேர்வு எழுத வைத்தார். உறவினர் ஒருவரின் தொல்லை தாங்காமல் வீட்டை விட்டு வெளியேறியதாக அந்தப் பெண் தெரிவித்தார். அந்த உறவினர் மீது நடவடிக்கை எடுக்க காவல் ஆய்வாளர் லெனின் அப்பாதுரையிடம் புகார் அளித்தார். தேர்வு அலுவலரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தாமதமாக மாணவி வந்தாலும் தேர்வுக்கு அனுமதிக்கக் கேட்டுக்கொண்டார். மாணவியிடம், கவனத்தை சிதறவிடாமல் தேர்வெழுதவேண்டும் என அறிவுரை கூறி வாழ்த்தி அனுப்பினார். மாணவியும் காவல் ஆய்வாளருக்கு நன்றி கூறிவிட்டு, மகிழ்ச்சியுடன் தேர்வு எழுதச் சென்றார். காவல் ஆய்வாளரின் இந்தச் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. காவல் ஆய்வாளரின் இந்த செயலை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.