கோயம்புத்தூரைச் சேர்ந்த ஷாமிலி என்ற இளம் பெண், தன்னை காதலித்து திருமணம் செய்துவிட்டு பின்னர் விலகிய தனது கணவர் குகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியைச் சேர்ந்த குகன் என்பவர், கோயம்புத்தூரைச் சேர்ந்த ஷாமிலியுடன் பழகத் தொடங்கி நெருக்கமான உறவாக மாறினார். இந்த நட்பு காதலாக வளர்ந்து, பின்னர் திருமணமாகியுள்ளது. குகன் சிங்கப்பூரில் வேலை பார்த்துவரும் நிலையில், இருவரும் வீடியோ, ஆடியோ கால் வாயிலாக தொடர்பில் இருந்தனர். பின்னர் கோயம்புத்தூருக்கு வந்த குகன், ஷாமிலியுடன் திருமணம் செய்துகொண்டதாக பெண் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

திருமணத்திற்குப் பிறகு குகன் மானாமதுரைக்கு சென்று தனது குடும்பத்துடன் வசிக்கத் தொடங்கினார். ஆனால் சில நாட்களிலேயே ஷாமிலியுடன் தொடர்பை துண்டித்ததாக கூறப்படுகிறது. குகனை தேடி மானாமதுரைக்கு வந்த ஷாமிலி, அங்கு குகனின் தாய் சாதியை காரணமாகக் கூறி வீட்டில் இருந்து அனுப்பிவைத்ததாக குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து மானாமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்த ஷாமிலி, போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், குகன் பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறினார்.
இதனையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட ஷாமிலி, “கண்காணிப்பாளர் நேரில் வரும்வரை இங்கிருந்து நகர மாட்டேன்” என்று வலியுறுத்தினார். காவல்துறையினர் சமரச முயற்சியில் ஈடுபட்ட போதும், அவர் ஒத்துக்கொள்ளாததால் பெண் காவலர்கள் அவரை தூக்கிச் சென்று அகற்றினர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பும், பொதுமக்களிடையே சலசலப்பும் ஏற்பட்டது.
காவல்துறை வட்டாரங்கள் தரப்பில் கூறுகையில், சம்பவம் கோயம்புத்தூரைச் சேர்ந்ததாக இருப்பதால், மானாமதுரை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, அதை கோயம்புத்தூர் காவல் நிலையத்திற்கு மாற்றி உள்ளதாக தெரிவித்தனர்.