• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

கச்சத்தீவை மீட்பதே ஒரே வழி : ஓ.பி.எஸ் அறிக்கை

Byவிஷா

Apr 10, 2024

மீனவர்கள் மீதான தாக்குதல் தடுக்கப்பட வேண்டுமென்றால், கச்சத்தீவை மீட்பதே ஒரே வழி என முன்னாள் முதல்வரும், ராமநாதபுரம் மக்களவைத்தொகுதி; சுயேச்சை வேட்பாளருமான ஒ.பன்னீர்செல்வம் அறிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது..,
“கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டதில் இருந்து தமிழக மீனவர்கள் ஆற்றொணாத் துயரத்துக்கு ஆளாகி வருகின்றார்கள். அவர்களுடைய வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி உள்ளது. தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுவதும், சிறைபிடிக்கப்படுவதும், படகுகள் மற்றும் வலைகள் சேதப்படுத்தப்படுவதும் தொடர் கதையாக நிகழ்ந்து வருகிறது.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு, ராமேஸ்வரத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்ற நிலையில், நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள்மீது கத்தி, இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் கொடூரத் தாக்குதல் நடத்தியதாகவும், அவர்களுடைய வலைகள் மற்றும் படகுகளை சேதப்படுத்தியதாகவும், இலங்கை கடற்படையினரின் கொடூரத் தாக்குதலுக்கு அஞ்சி தமிழக மீனவர்கள் கரை திரும்பியதாகவும், இந்தத் தாக்குதலில் இரண்டு மீனவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் செய்தி வந்துள்ளது மிகுந்த மன வேதனை அளிக்கிறது.
இலங்கை கடற்படையின் மனிதாபிமானமற்ற இந்தச் செயல் கடும் கண்டனத்துக்கு உரியது. இலங்கை கடற்படையின் இந்தக் கொடூரத் தாக்குதல் ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் மிகுந்த பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆயுதந்தரிக்காத அப்பாவி தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் நடவடிக்கை என்பது தமிழக மீனவர்களை அச்சுறுத்துவதோடு மட்டுமல்லாமல், அவர்களை மீன்பிடித் தொழில் புரிவதிலிருந்து தடுக்கும் நடவடிக்கை ஆகும்.
தற்போதுள்ள சூழலில், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினரின் தாக்குதலிலிருந்து நிரந்தரமாக தடுப்பதற்கான ஒரே வழி இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக தாரைவார்க்கப்பட்ட இந்தியாவின் ஒரு பகுதியான கச்சத்தீவு இலங்கை நாட்டிடமிருந்து மீட்டெடுக்கப்பட வேண்டும். இதைத்தான் தமிழக மீனவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இதனை நன்கு உணர்ந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, 1974 மற்றும் 1976ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கச்சத்தீவு தாரைவார்ப்பு தொடர்பான இந்திய – இலங்கை நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தங்கள் செல்லத்தக்கவை அல்ல என்று அறிவிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் 2008ம் ஆண்டு வழக்கு தொடர்ந்துள்ளார்கள் என்பதை இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இதன் அடிப்படையில் கச்சத்தீவு மீட்டெடுக்கப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.