• Tue. Dec 10th, 2024

வங்கியின் மிரட்டலால் தீக்குளிக்க முயன்ற முதியவர்…

Byகுமார்

Oct 26, 2021

வங்கியில் வாங்கிய கடனை உடனே கட்டச் சொல்லி மிரட்டுவதாக கூறி தீக்குளிக்க முயற்சித்த முதியவர். காவல்துறையினர் தடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை யாகப்பா நகரைச் சேர்ந்தவர் விவசாயி இக்பால். இவர் வங்கியில் விவசாயத்திற்க்காக 40 லட்ச ரூபாய் கடன் பெற்றிருக்கிறார். இதற்காக அவரது வீட்டை அடமானமாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வங்கியில் முறையாக கடன் செலுத்தவில்லை என கூறி வங்கி அலுவலர்கள் அவரது வீட்டை ஜப்தி செய்ய நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது . இந்த நிலையில் இன்று மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த இக்பால் திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். அங்கிருந்த காவல்துறையினர் அதனை பறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயி இக்பால் கூறுகையில், தான் வங்கியில் விவசாயத்திற்காக 40 லட்ச ரூபாய் கடன் பெற்றிருப்பதாகவும், இதற்காக தனது வீட்டை அடமானமாக வைத்து உள்ளதாகவும், கடந்த 3 ஆண்டுகளாக உடல் நலக்குறைவு, கொரோனா நோய் தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வங்கிக்குச் செலுத்த வேண்டிய கடனை செலுத்த முடியவில்லை. இதுவரை ஏழு லட்ச ரூபாய் செலுத்தி உள்ளதாகவும், நேற்று வங்கிக்கு சென்று 20 லட்ச ரூபாயை முன்பணமாக கட்டி, பின்பு தொடர்ச்சியாக வங்கிக்கு தர வேண்டிய நிலுவை தொகை கட்டுவதாகும் தெரிவித்திருக்கிறார். ஆனால் வங்கி அதிகாரிகள் வீடு ஜப்தி செய்தே தீருவோம் என கூறுவதாக வேதனை தெரிவித்தார். மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவிக்க வந்த நிலையில் காவல்துறை விசாரணை செய்து வருவதாக தெரிவித்தார். தீக்குளிக்க முயற்சித்த இக்பாலிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.