• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

நாடே எதிர்பார்க்கும் முரசொலி பஞ்சமி நிலம் தீர்ப்பு இன்று வெளியாகிறது..!

Byவிஷா

Jan 10, 2024

நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் முரசொலி பஞ்சமி நிலம் குறித்த வழக்கில், இன்று தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், தலைமை வழக்கறிஞர் திடீர் ராஜினாமா செய்திருப்பது அடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முரசொலி பத்திரிக்கையின் அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக அளிக்கப்பட்டிருந்த புகாரில், தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் அனுப்பிய நோட்டீஸை எதிர்த்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது தொண்டர்களிடையேயும், தமிழக அரசியலிலும் பரபரப்பாக்கி உள்ளது.
திமுக-வின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியின் அலுவலகம் சென்னை கோடம்பாக்கத்தில் 12 கிரவுண்ட், 1825 சதுர அடி நிலத்தில் அமைந்துள்ளது. இந்த நிலம் பஞ்சமி நிலம் என பாஜக மாநில நிர்வாகி சீனிவாசன் கடந்த 2019ம் ஆண்டு தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகார் மீதான விசாரணைக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸை எதிர்த்தும், அறக்கட்டளை நிலம் தொடர்பாக விசாரிக்க அதிகாரம் இல்லை என்றும், சொத்துகளின் உரிமை தொடர்பான விவகாரம் என்பதால் பட்டியலின ஆணையம் விசாரிக்க முடியாது எனக் கூறி முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது முரசொலி அறக்கட்டளை தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி, பஞ்சமி நிலம் அல்ல என அரசு அறிக்கை அளித்ததால், புகாரை முடிக்க முடிவெடுத்துள்ளதாக ஆணையம் கூறியதாகவும், ஆனால் திடீரென புகார் நிலுவையில்தான் உள்ளதாகவும் குறிப்பிட்டார். பஞ்சமி நிலம் என்பதற்கான ஆதாரங்களை புகார்தாரர் சமர்ப்பிக்கவில்லை எனவும் தெரிவித்தார். அரசியல் காரணத்திற்காக தேசிய எஸ்.சி. ஆணையம் இந்த புகாரை நிலுவையில் வைத்துள்ளதாகவும், அதிகார துஷ்பிரயோகம் செய்வதாகவும் குறிப்பிட்டார். ஆணையம் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது எனவும், பஞ்சமி நிலமா இல்லையா என வருவாய்த் துறைதான் விசாரிக்க முடியுமே தவிர, தேசிய எஸ்.சி. ஆணையம் தலையிட முடியாது எனவும் தெரிவித்தார்.
தேசிய பட்டியல் இனத்தவர் ஆணையம் தரப்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன் ஆஜராகி, பட்டா மற்றும் விற்பனை பத்திரம் ஆகியவை உரிமையாளரை முடிவு செய்வதற்கான இறுதியான ஆதாரம் அல்ல எனவும், ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்கக்கூடாது எனவும், தொடர்வதற்கு அனுமதிக்க வேண்டுமெனவும் தெரிவித்தார். புகார்தாரர் சீனிவாசன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.ரவி ஆஜராகி, வழக்கு நிலுவையில் இருந்த போது பட்டா வழங்கப்பட்டதாகவும், அதனால் ஆணையம் விசாரணை செய்வது சரியானது தான் என தெரிவித்தார்.
வில்லங்க சான்றிதழில் 1974ல் மாதவன் நாயர் பெயரோ, அஞ்சுகம் பதிப்பகம் பெயரோ இல்லை என்றும், திருவண்ணாமலை நிலம் தொடர்பாக தான் உள்ளதாக தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் இன்று ஜனவரி 10ம் தேதி தீர்ப்பளிப்பதாக நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் அறிவித்திருந்த நிலையில், தீர்ப்பு எப்படி இருக்கும் என்று நாடே பரபரப்பாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது.