• Mon. Sep 15th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

தமிழ் சினிமாவில் காணாமல் போன கதாசிரியர்” -வைரமுத்து கவலை

ByAra

Sep 15, 2025

இயக்குநரும், நடிகருமான வ. கௌதமன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

அப்போது பேசிய கவிப்பேரரசு வைரமுத்து, ”கௌதமன் சமகாலத்தில் மதிக்கத்தக்க ஒரு இயக்குநர். சமரசம் இல்லாத போராளி. கலைத் துறையில் தமிழ் இன உணர்வோடும், மொழி உணர்வோடும் இயங்குகிற சிலரில் இவரும் ஒருவர். அவர் என் இளைய தம்பி என கொண்டாடுவேன். எனவே கௌதமன் இயக்கியிருக்கும் படைப்பு வெற்றிபெறவேண்டும்.

படையாண்ட மாவீரா படத்திற்கு மிகப்பெரிய பலம் இருக்கிறது. நம்மிடம் மிகப்பெரும் நடிகர்கள் இருக்கிறார்கள், மிகப்பெரும் தயாரிப்பாளர்கள் இருந்தார்கள், இருக்கிறார்கள், மிகப் பெரிய ஒளிப்பதிவாளர்கள் இருக்கிறார்கள், மிகப் பெரிய தொழில் நுட்ப வல்லுனர்கள் இருக்கிறார்கள்.

ஆசியாவின் சிறந்த திரையரங்குகள் தமிழகத்தில் உள்ளன. இவ்வளவு இருந்தும் தமிழகத்தில் படங்கள் ஏன் வெற்றி பெறவில்லை என்றால், இவர்கள் வாழ்க்கையைப் பார்த்து படம் எடுக்காமல் படத்தைப் பார்த்து படம் எடுக்கிறார்கள்.

எட்டு கோடி பேர் மக்கள் தொகை கொண்ட இந்த தமிழகத்தில் சினிமாவை திரையரங்கத்திற்கு சென்று பார்க்கும் மக்களின் எண்ணிக்கை 35 லட்சமாக சுருங்கி விட்டார்கள்.

இதற்கு காரணம் என்ன என்று பார்த்தோமானால் சினிமா தொழில்நுட்பத்தால் துண்டாடப்பட்டுவிட்டது. அதிலும் தமிழ் சினிமாவின் கதாசிரியன் என்று ஒருவர் இருந்தார், அவரை கொன்றது யார்? திரைக்கதை ஆசிரியர் என்று ஒருவர் இருந்தார், அவரை அழித்தது யார்? வசனகர்த்தா என்று ஒருவர் இருந்தார், அவரை மழித்து வழித்தெடுத்தது யார்?

படையாண்ட மாவீரா படத்தை பொறுத்தவரை இது வாழ்க்கை, ரத்தம், கண்ணீர், வியர்வை என ஒரு உண்மையான போராளியின் போராட்ட கதையாக இருப்பதால், இதில் கற்பனைகளுக்கு இடமில்லை. மலையூர் மம்பட்டியான், கரிமேடு கருவாயன், சந்தனக் காட்டு வீரப்பன் போன்ற வாழ்ந்த வீரர்களின் அசகாய சூரத்தனத்தை மக்கள் கொண்டாடுவார்கள், ரசிப்பார்கள். அந்த வரிசையில் இந்த படையாண்ட மாவீரா படத்தையும் மக்கள் ரசிப்பார்கள். கொண்டாடுவார்கள் என நம்புகிறேன்” என்றார் வைரமுத்து.

இப்படத்தை வ.கௌதமன் இயக்கியுள்ளார்.

குண்டுகல்யாணத்துக்கு உதவுங்கள்… ஜெயலலிதாவின் உதவியாளர் கோரிக்கை! 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளராக பல ஆண்டுகள் பணியாற்றிய பூங்குன்றன் உருக்கமான ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார்.

”அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் தனது வாழ்நாளையே இணைத்துக் கொண்டு உழைத்த குடும்பத்தின் பெருமைமிகு உறுப்பினராக விளங்குபவர் நடிகர் குண்டு கல்யாணம் அவர்கள்.

நடிகர் குண்டு கல்யாணம் அவர்களின் தந்தை நடிகர் குண்டு கருப்பையா அவர்கள் புரட்சித்தலைவருடன் நெருங்கிப் பழகியவர். குண்டு கல்யாணம் அவர்களின் மூத்த சகோதரர் மகாலிங்கம் அவர்கள் தலைவரின் உதவியாளராக கடைசி வரை பணியாற்றியவர். மற்றொரு அண்ணன் சுவாமிநாதன் அவர்கள் இன்றும் புரட்சித்தலைவரின் ஆற்காடு அலுவலகத்தில் பணி செய்து வருகிறார்.

இந்தக் குடும்பமே புரட்சித் தலைவருக்கும், புரட்சித் தலைவிக்கும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் தங்களது வாழ்நாளையே அர்ப்பணித்த குடும்பம் என்பதில் எவருக்கும் சந்தேகமில்லை.

அத்தகைய குடும்பத்தைச் சேர்ந்த நடிகர் குண்டு கல்யாணம் அவர்கள், கழகத்தின் நட்சத்திர பேச்சாளராக பட்டி தொட்டிகளிலும், பல்லாயிரக்கணக்கான கூட்டங்களிலும் கழகத்தின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சென்றவர். தலைமையின் மீது அன்பு கொண்டவர், இயக்கத்தின் மீது காதல் கொண்டவர், மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.

இப்போது அந்த நல் இதயம் கொண்டவர் உடல்நிலை காரணமாக காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவச் செலவுகளை அவர் தனியாகச் சமாளிக்க முடியாது என்பதும் அனைவருக்கும் தெரிந்ததே.

இந்நேரத்தில், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இன்று உயிருடன் இருந்திருந்தால் அவருடைய சிகிச்சைக்கு தேவையான அனைத்துச் செலவுகளையும் ஏற்றிருப்பார் என்பதில் எவருக்கும் ஐயமில்லை.

எனவே, தாய் வழியில் அவருடைய மருத்துவ செலவுகளை கழகம் ஏற்றுக்கொள்ள வேண்டும். கழகத்தால் வளர்ந்தவர்கள் அவருக்கு உதவி செய்யவேண்டும். பேரன்பிற்குரிய எடப்பாடியார் அவர்கள் இந்த உண்மை தொண்டனுக்கு வாழ்வளிக்க வேண்டும். அவருக்கு செய்யப்படும் இந்த உதவி, உண்மையில் புரட்சித்தலைவரையே சென்றடையும் உதவி ஆகும். புரட்சித்தலைவரின் ஆசீர்வாதமும், புரட்சித்தலைவியின் அருளும் அதை செய்பவர்களுக்குக் கிடைக்கும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை உண்டு “ என்று கூறியுள்ள பூங்குன்றன்….  தொடர்புக்கு திரு. சதீஷ் அவர்கள், +91 98843 55505  என்ற எண்ணையும் பகிர்ந்துள்ளார்.

Ara