மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பேரையூர் ரோடு, வத்தலக்குண்டு ரோடு பகுதியில் 18 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.
உரிய பாதுகாப்பின்றி நடைபெறும் இந்த சாலை விரிவாக்க பணி இரவு நேரத்திலும் அடிக்கடி நடைபெறுகிறது.

நேற்று இரவு பேரையூர் ரோடு வளையபட்டி அருகில் சாலை விரிவாக்க பணிக்காக பணி செய்து கொண்டிருந்த ஜேசிபி வாகனம் மீது அதிகாலை 3 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்த எழுமலையைச் சேர்ந்த ரமேஷ் என்ற இளைஞர் மோதியதில் படுகாயமடைந்தார்.
அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், இந்த விபத்து தொடர்பாக உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உரிய பாதுகாப்பு இன்றி இரவு நேரங்களில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெறும் சூழலில், இதன் காரணமாக ஒரு இளைஞர் உயிரிழந்திருக்கும் சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.