• Sat. May 4th, 2024

தமிழகம் முழுவதும் இன்று முதல் அரையாண்டுத் தேர்வுகள் தொடக்கம்..!

Byவிஷா

Dec 13, 2023

தமிழகத்தில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை இன்று அரையாண்டுத் தேர்வுகள் தொடங்கியுள்ளது.
தமிழகம் முழுவதும் ஒரே வினாத்தாள் மூலம் அரையாண்டு தேர்வு நடைபெறுகிறது. மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகமிக கனமழை பெய்தது. இதனையடுத்து கடந்த வாரம் முழுவதும் இந்த 4 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து மழை வெள்ளத்தில் புத்தகங்கள் இழந்த மாணவர்கள் தேர்வுக்கு படித்து தயாராக முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் மாநிலம் முழுவதும் திங்கட்கிழமை தொடங்க இருந்த அரையாண்டுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. பள்ளி கல்லூரிகளில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டும், மழை நீர் தேங்கியிருந்ததால் தற்போது படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இதனையடுத்து அனைத்து பள்ளிகளும் திங்கட்கிழமை முதல் வழக்கம் போல் செயல்பட்டு வருகின்றன. அதே சமயம், மாணவர்களின் புத்தகங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் அவர்களுக்கு நேற்று புதிய பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.
குறிப்பாக சென்னையில் மட்டும் 12,000 மாணவர்கள் தங்கள் புத்தகங்களை இழந்தனர். செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் 8,000 பேர் என ஒட்டுமொத்தமாக 20,000 மாணவர்களுக்கு புத்தகங்கள் தேவைப்படுவது கண்டறியப்பட்டது. இதற்காக, சேலம், தருமபுரி, திருச்சி, திருவண்ணாமலை, கடலூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 95,000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு அவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டன.
அவற்றை சென்னை மாநகரில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் ஆசிரியர்களிடம், பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் ஒப்படைத்தனர். மாணவர்களுக்கும் விநியோகம் செய்யப்பட்டன. இந்நிலையில், திருத்தி அமைக்கப்பட்ட புதிய அட்டவணைப்படி, 1 முதல் 12 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று அரையாண்டுத் தேர்வுகள் தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *