கடந்த அதிமுக ஆட்சியில் கொள்ளையடிப்பதிலும், தங்களை பாதுகாத்து கொள்வதிலுமே குறியாக இருந்ததாக ஊத்துக்கோட்டை அருகே பால்வளத்துறை அமைச்சர் சாமு நாசர் தெரிவத்தார். ஆனால் அவர் தெரிவித்த இந்த கருத்து, பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு முழுமையாக கட்டி முடித்து மின்னிணைப்பு கூட தராத குடியிருப்புகளை திறந்து வைக்க வந்த இடத்தில் என்பதுதான் வேதனை.

திருவள்ளூர் மாவட்டம் கச்சூர் ஊராட்சியில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் 16 பேரின் குடும்பத்தினருக்கு அரசு நிதி உதவியில் இலவச வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளை பால்வளத்துறை அமைச்சர் நாசர் ரிப்பன் வெட்டி குத்து விளக்கேற்றி திறந்து வைத்த அவர், வீட்டின் சாவியை பயனாளிகளுக்கு வழங்கினார். பின்னர் வீட்டுமனை பட்டா இல்லாத 57 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாவினை வழங்கினார்.

பின்னர், அமைச்சர் நாசர் விழாவில் பேசுகையில், கடந்த அதிமுக ஆட்சியினர் கொள்ளையடிப்பதிலும் தங்களை பாதுகாத்து கொள்வதிலுமே குறியாக இருந்ததாக அமைச்சர் தெரிவித்தார்.
பார்வையற்றவர்களுக்கு கட்டி தரப்பட்ட 16 வீடுகளிலும் உரிய மின்சாரம் இல்லாததால் கொக்கி போட்டு மின்சாரத்தை எடுத்து நிகழ்ச்சியில் ஒலிபெருக்கி பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது. மேலும் கடந்த திமுக ஆட்சியில் கட்டி முடிக்கப்பட்டு மின் இணைப்பு மற்றும் கழிப்பிட வசதி முழுமை பெறாமல் இருந்த நிலையில், தற்போது அதே நிலையில் குடியிருப்புகளை பார்வையற்ற பயனாளிகளிடம் அதிகாரிகள் திறந்து வைத்து ஒப்படைத்துள்ளனர். கடந்த பத்து ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் இந்த வீடுகள் யாருக்கும் உபயோகப் பாடாமல் பூட்டியே இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
புதியதாக திறக்கப்பட்ட அரசு இலவச வீடுகளில் முறையாக கழிவறை மற்றும் மின் இணைப்புகளை வழங்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை வைத்தனர்.
இதில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டிஜே கோவிந்தராஜன் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.