மங்களதேவி கண்ணகி கோவிலுக்கு வருகை தந்த இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் மங்களதேவி கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகள், காவேரி தீர்த்தத்துடன் மனு வழங்கினர்.
தேனி மாவட்டம் கூடலூர் அருகே பளியன் குடியிருப்பு மலையடிவாரம், வண்ணாத்தி (விண்ணேற்றி) பாறை மலை உச்சியில் பிரசித்திபெற்ற மங்கலதேவி கண்ணகி கோவில் உள்ளது. தமிழக-கேரள எல்லையில் உள்ள இந்த கோவில் பகுதி கண்ணகி கோட்டம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி அன்று சித்திரை முழுநிலா திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.

அதன்படி இன்று சித்திரை முழுநிலா விழாவை முன்னிட்டு மங்கலதேவி கண்ணகி கோவிலுக்கு வருகை தந்த தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கு கம்பம் ஸ்ரீ ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரி அருகே மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை துணைத் தலைவர் கே.ஆர்.ஜெயபாண்டியன் தலைமையில் செயலாளர் ராஜ கணேசன், பொருளாளர் முருகன் மற்றும் நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
பின்னர் கம்பம் இராமருஷ்ணன் எம்.எல்.ஏ முன்னிலையில் அறக்கட்டளை நிர்வாகிகள் தங்களுடைய நீண்ட நாள் கோரிக்கையான தமிழக வனப் பாதையான தெல்லுக்குடி பாதையை வாகன பாதையாக விரைந்து சரி செய்து தர வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர். முன்னதாக மங்கலதேவி கண்ணகி பிறந்த ஊரான காவேரி பூம்பட்டினத்தில் இருந்து கொண்டு வரப்பட்டிருந்த காவிரி புனித நீர் அடங்கிய கலசத்தை மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகள் அமைச்சரிடம் வழங்கினர்.
அது கண்ணகி கோவில் பூஜைக்காக கொண்டு சொல்லப்பட்டது. இந்த தீர்த்தத்தை ஆண்டு தோறும் கொண்டு வரும் நாகப்பட்டிணம் வரலாற்று ஆர்வலர் ராமச்சந்திரன் கூறுகையில், கண்ணகி பிறந்த ஊரான காவேரி பூம்பட்டிணத்தில் இருந்து பிறந்த வீட்டு சீதனமாக காவேரி தீர்த்தம் வரலாற்று ஆர்வலர்கள் தலைமையில் மயிலாடுதுறை மாவட்டம், நாகப்பட்டிணம் மாவட்டம், திருவாரூர் மாவட்டம், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தமிழ் சங்கங்கள் இணைந்து காவிரி ஆற்றில் புனிதநீர் எடுக்கப்பட்டு அதற்கு மரியாதை செலுத்தி எடுத்து வந்து கம்பத்தில் கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகளிடம் வழங்குவது வழக்கம்.
பின்னர் அது கோவிலுக்கு கொண்டு சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படும். அதன்படி இந்த ஆண்டும் கொண்டுவரப்பட்ட புனித நீர் அடங்கிய கலசத்தை மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகள் கண்ணகி கோவிலுக்கு செல்லும் அமைச்சரிடம் வழங்கினர் என்றார். நிகழ்ச்சியின் போது திமுக மாநில தீர்மான குழு இணைச் செயலாளர் ஜெயக்குமார், ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் குரு குமரன், கம்பம் நகர திமுக செயலாளர்கள் வீரபாண்டியன், பால்பாண்டி ராஜா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.