இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில், தமிழ் சினிமா வரலாற்றில் முக்கியமான திரைப்படமாக உருவாகியுள்ளது பொன்னியின் செல்வன்.
இப்படத்தின் முதல் பாகத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் “பொன்னி நதி” இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல், நேற்று மாலை சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில், ரசிகர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.
இவ்விழாவினில் நடிகர் கார்த்தி பேசியதாவது, இங்கு இந்த இடத்தில் ரசிகர்களுடன் இந்த பாடலை வெளியிடுவது எங்களுக்கு மகிழ்ச்சி. இது தமிழர்களுடைய படம். எல்லோர் மனதிலும் இருக்கும் படம். இந்த படத்தின் கதை அனைவருக்கும் தெரியும், ஆனாலும் படம் எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கான ஆர்வம் அனைவருக்கும் இருக்கிறது.
இந்த படம் எடுத்தது பெரிய சுவாரஷ்யம். நான், ஜெயராம் சார், ஜெயம் ரவி மூவரும் ஒன்றாக வரும் காட்சிகள் அதிகமாக இருந்தது.ஜெயராம் சார் நடிக்கும் நம்பி கதாபாத்திரத்தின் உயரத்திற்காக அவர் சில விஷயங்களை செய்துள்ளார், அதை நீங்கள் பார்த்தால் கண்டிப்பாக பிரமிப்பு உருவாகும். இந்த பாடல் பொன்னி நதி, இதை படமாக்கியது மிகப்பெரிய அனுபவம். அன்றைய பொன்னி நதி தான் இன்றைய காவிரி. இந்த படம் பல சிக்கல்களை கடந்து உருவானது, அதற்கு முழு காரணம் மணிரத்னம் சார் தான். அவர் 120 நாளில் இரண்டு பாகங்களையும் எடுத்து முடித்துவிட்டார், இதை யாரும் நம்பமாட்டார்கள். இது போன்ற படத்தை மீண்டும் ஒருவர் எடுப்பதற்கு குறைந்தது 10 வருடம் ஆகும். இந்த பாடலை ரகுமான் அவர் குரலில் பாடியுள்ளார், இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ளார். இந்த பாடலை கேட்கும் போது, சோழ தேசத்துக்கு போன மாதிரி இருந்தது. இந்த படம் பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ளது, அதற்கு லைகா சுபாஸ்கரனுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். தமிழ் சினிமாவை அடுத்தகட்டத்துக்கு எடுத்து போக முயற்சி செய்பவர் சுபாஸ்கரன். அவர் இந்த திரைப்படத்திற்காக பல கடுமையான முயற்சிகளை எடுத்துள்ளார் என்றார்
நடிகர் ஜெயராம் பேசியதாவது, இது போன்ற அற்புதமான படத்தில் சிறிய பகுதியாக இருப்பது எனக்கு பெருமை மற்றும் சந்தோசம். அதற்கு தயாரிப்பாளர் சுபாஸ்கரன், மணிரத்னம், மற்றும் படக்குழுவிற்கு நன்றி கூறிகொள்கிறேன். எல்லா படமும், படம் பார்க்கும் போது தான் கதை தெரியும். ஆனால் பொன்னியின் செல்வன் கதையும், திரைக்கதையும், கதாபாத்திரமும் மக்கள் மனதில் பதிந்து இருக்கிறது. அருள்மொழி வர்மன், வந்தியதேவனும் உடல்வாகுவிற்காக கடுமையாக உழைத்தனர். உடற்பயிற்சி செய்தனர். மணி ரத்னம் என்னை மட்டும் சாப்பிட சொல்வார். ஏனெனில் என் கதாப்பாத்திரம் குண்டாக தெரிய வேண்டும். மணிரத்னம் சாருடன் ரவிவர்மன், ரகுமான், தோட்டா தரணி என பலர் உழைத்துள்ளனர். ஆழ்வார்கடியன் நம்பி உங்கள் மனதில் நிறைந்து இருப்பார் என்றார்
நடிகர் ஜெயம் ரவி பேசியதாவது, இந்த திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியை நடிக்கும் போது, மக்கள் எப்படி இதை ரசிப்பார்கள் என யோசிப்போம். இன்று அதில் சில காட்சிகளை உங்கள் மத்தியில் பார்த்து, அதற்கு நீங்கள் கொடுத்த வரவேற்பை கண்ட போது, இந்த திரைப்படத்தில் நாங்கள் நடித்ததற்கான முழு சந்தோசம் கிடைத்தது. தமிழ் சினிமாவில் மட்டும் தான் ஒரு நல்ல ஷாட்டிற்கு கூட வரவேற்பை கொடுப்பார்கள், அவ்வளவுபுத்திசாலிதனமான ரசிகர்கள் தமிழ் படம் பார்ப்பவர்கள். நமக்கு பிடித்த கார்த்தி, ரகுமான், ரவிவர்மன், பிருந்தா மாஸ்டர் என அனைவரும் ஒன்றாகி வந்துள்ள இந்த பாடல் சிறப்பாக உருவாகியுள்ளது. கார்த்தி எனக்கு மிகப்பெரிய உறுதுணையாக இந்த படத்தில் இருந்தார். இந்த படத்தில் பல ஹீரோக்கள் இருக்கின்றனர். திரையில் தெரியாத பல ஹீரோக்களும் இருக்கிறார்கள். முதலில் மணிரத்னம் சார், அவருக்கு இந்த படம் பலவருட கனவு, பலரால் முடியாததை சாதித்துள்ளார். இந்த படம் பெரிய பாடத்தை எங்களுக்கு கொடுத்துள்ளது. இந்த படத்தில் பல ஆயிரம் பேர் உழைத்துள்ளனர். பொன்னியின் செல்வன் மக்களுக்காவே எடுத்த படம், கூடிய விரைவில் படம் வெளியாகும், அது கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும்.இணையத்தில் வெளியிடப்பட்ட பொன்னி நதி பாடல் பெரும் வரவேற்பை பெற்று வைரலாக பரவி வருகிறது. படத்தின் அடுத்த பாடல்கள், டிரெய்லர் குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்றார்.