• Mon. Apr 29th, 2024

சமூகநீதி பேசும் கதைதான் ‘அழகிய கண்ணே’ படம்..!

Byதன பாலன்

Jun 15, 2023

Esthell Entertainer நிறுவனத்தின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் R.விஜயகுமாரின் இயக்கத்தில், லியோ சிவக்குமார், சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் காதல் டிராமாவாக உருவாகியுள்ள படைப்பு “அழகிய கண்ணே”.

இப்படத்தில் இயக்குநர் சீனு ராமசாமியின் உதவியாளரும், அவரின் சகோதரருமான R.விஜயகுமார் இயக்குநராக அறிமுகமாகிறார். பிரபல மேடைப் பேச்சாளரான திண்டுக்கல் I.லியோனி அவர்களின் மகன் லியோ சிவக்குமார் நாயகனாக அறிமுகமாகிறார்.

இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை வடபழநி
பிரசாத் பிரிவியூ தியேட்டரில் நடைபெற்றது.இந்நிகழ்வினில் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ராஜகோபால் பேசும்போது,

“Esthell Entertainer சார்பில் சிறந்த படைப்புகளை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கில் செயல்பட்டு வருகிறோம். லியோனி சார் கொரோனா காலகட்டத்தில் இந்தக் கதையைக் கொண்டு வந்தார். சேவியர் பிரிட்டோ அவர்களும் இந்தக் கதையை மிகச்சிறந்த கதை என்றார். கதை பிடித்துப் போனதால் கொரோனா என்றாலும் பரவாயில்லை என தயாரிப்பில் இறங்கி விட்டோம். லியோ சிவக்குமார் மிக அருமையான கதாபாத்திரம் செய்துள்ளார். படம் நல்ல படைப்பாக வந்துள்ளது. அனைவரும் ஆதரவு தாருங்கள்..” என்றார்.
நடிகை சஞ்சிதா ஷெட்டி பேசும்போது,

“என்னைப் பற்றி இப்போதும் நீங்கள் எழுதுகிறீர்கள். என்னை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் உங்களுக்கு என் நன்றிகள். கே.எஸ்.ரவிக்குமார் சார் ரசிகை நான். நீங்கள் வந்து வாழ்த்துவது மகிழ்ச்சி. நாயகன் சிவாவின் மொத்த ஃபேமிலியும் எப்போதும் செட்டில் இருப்பார்கள். என் அம்மாவிடம் “என்னை ஏஞ்சல் போலப் பார்த்துக் கொள்கிறார்கள்” என்றேன். ஷூட்டிங் அனுபவம் அப்படித்தான் இருந்தது. லியோனி சார் பழக மிக இனிமையானவர். இந்தப் படத்தில் எனக்கு மிக முக்கியமான கதாப்பாத்திரம். ஐ.டி.யில் வேலை பார்க்கும் சென்னைப் பெண். என் திரை வாழ்க்கையில் இது மிக முக்கியமான படம். ஒரு உதவி இயக்குநரின் வாழ்வை இந்தப் படத்தின் மூலம் அறிந்து கொள்வீர்கள். ஒரு சிம்பிள் லவ் ஸ்டோரி. உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் படத்தைப் பார்த்து ஆதரவு தாருங்கள்..” என்றார்.

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேசும்போது,

“பள்ளிக் காலத்திலிருந்தே லியோனி சாரின் ரசிகன் நான். அவரது மேடைப்பேச்சு எனக்கு ரொம்பப் பிடிக்கும். லியோனி சார் பற்றிப் பேச நிறைய இருக்கிறது. இன்று மேடையில், அவர் மகன் பேசும்போது ஆனந்தத்தோடு அவர் பார்த்துக் கொண்டிருந்ததை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். பெருமையாக இருந்தது. எல்லா தந்தைக்கும் இந்த அன்பு இருக்கும்.
இயக்குநர் விஜயகுமார் பேச்சிலேயே அவர் சிறந்த படைப்பைத் தந்திருப்பார் என்பது தெரிகிறது. மிகக் கூர்மையாக, நகைச்சுவையுடன் பேசினார் படமும் அப்படி இருக்கும் என நம்புகிறேன். நாயகன் சிவா அவரிடம் பேச்சில் தெரியும் பணிவு, அவரின் பெற்றோரிடமிருந்து வந்திருக்கிறது. நீங்கள் தமிழ் சினிமாவில் பெரிய இடத்தை அடைய வேண்டும். படத்தில் எல்லோரும் கடினமாக உழைத்திருப்பது தெரிகிறது. லியோனி சார் யார் மனதையும் காயப்படுத்தாதவர். அவர் மனது போலவே படமும் வெற்றி பெற வாழ்த்துக்கள்…” என்றார்.

இயக்குநர் R.விஜயகுமார் பேசும்போது,

“நான் இயக்குநர் சீனு ராமசாமியின் உதவி இயக்குநர். அவரின் உடன் பிறந்த தம்பி நான். அவருடன் 4 படங்களில் வேலை பார்த்துள்ளேன். அந்த அனுபவத்தில் ஒரு நல்ல படைப்பை உருவாக்க வேண்டுமென்கிற நோக்கில், இந்தப் படத்தை உருவாக்கியுள்ளேன்.
இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் சாரின் தீவிர ரசிகன் நான். அவர் என்னை வாழ்த்த வந்திருப்பது மகிழ்ச்சி. கோவிட் காலத்தில் இந்தக் கதையை கடும் இன்னல்களுக்கிடையில் உருவாக்கினேன். மாமனிதன் படத்தில் சிவா ஒரு கதாப்பாத்திரம் செய்தார். அப்போது அண்ணன் சீனு ராமசாமி, “இவன் ஒரு ஹீரோ மெட்டீரியல்” என்றார். அதை மனதில் வைத்து அவரை ஹிரோவாக்கினேன்.இந்தப் படம் உருவாக முக்கிய காரணம் லியோனி அண்ணன். அவர்தான் தயாரிப்பாளரிடம் என்னை அனுப்பினார். சிவா இப்படத்தில் கடுமையாக உழைத்துள்ளார். அவர் தமிழ் சினிமாவில் சிறந்த இடத்தை பிடிப்பார். இப்படம் மதுரையில் ஆரம்பித்து சென்னை நோக்கி நகரும் ஒரு கதை. உதவி இயக்குநரின் வாழ்வைச் சொல்லும் கதை. பல நாயகிகள் இந்தக் கதையைக் கேட்டு தயங்கினார்கள். ஆனால், சஞ்சிதா ஷெட்டி கதையைக் கேட்டவுடன் “நான் நடிக்கிறேன் சார்” என்றார். அவருக்கு நன்றி. அவருக்கு இந்தப் படம் ஒரு திருப்பமாக இருக்கும்.
இயக்குநர் பிரபு சாலமன் சார், பிரபு சாலமனாகவே நடித்துள்ளார். அவர் அலுவலகத்தையும் படப்பிடிப்பிற்கு தந்தார். அவருக்கு என் நன்றிகள். நட்புக்காக முதல் முறையாக விஜய் சேதுபதி, விஜய் சேதுபதியாகவே நடித்துள்ளார் அவருக்கும் என் பெரிய நன்றி. சமூக நீதி பேசும் அழகான படம் இது. உங்கள் ஆதரவைத் தாருங்கள்..” என்றார்.

கதாநாயகன் லியோ சிவக்குமார் பேசும்போது,

“இந்த மேடை எனக்கொரு கனவு. சினிமாவில் நடிப்பதுதான் எனக்கு மிகப் பெரிய கனவு. அதற்கு எனக்குச் சுதந்திரம் அளித்ததற்கு, என் தந்தைக்கு இந்த படத்தை சமர்ப்பிக்கிறேன்.சினிமாவை நம்பி பல ஆண்டுகள் நான் பயணம் செய்துள்ளேன், சினிமாவை சுற்றித்தான் என் வாழ்க்கை பயணம் இருந்தது.எங்கள் அழைப்பை ஏற்று இங்கு வந்த கே.எஸ்.ரவிக்குமார் சாருக்கு மிகப் பெரிய நன்றி. என்னை இந்த கதாபாத்திரத்துக்குத் தேர்வு செய்த இயக்குநர் விஜயகுமார் அண்ணனுக்கு நன்றி. இந்தப் படத்திற்குக் கதாநாயகி தேர்வுதான் மிகவும் கடினமாக இருந்தது. இறுதியில் சஞ்சிதா ஷெட்டி நடிக்க ஒப்புக் கொண்டார். சஞ்சிதா ஷெட்டி இந்தப் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிக்காட்டியுள்ளார். எனக்கு நடிப்பில் நிறையை உதவிகள் செய்துள்ளார். இந்த படம் எனக்கு முதல் படி. அனைவரும் இந்த படத்திற்கு ஆதரவு தர வேண்டும்…” என்றார்.

திண்டுக்கல் I.லியோனி பேசும்போது,

“கே.எஸ்.ரவிக்குமார் சாரின் மிகப் பெரிய ரசிகன் நான். என் குடும்பத்தின் சார்பாக நான் அவருக்கு நன்றியைக் கூறிக் கொள்கிறேன். இந்தப் படக் குழு அனைவருமே மிக எளிமையானவர்கள். விஜய் சேதுபதிக்கு எனது மிகப் பெரிய நன்றி. நான் கேட்டதும் உடனே சரி என்று ஒரு கதாபாத்திரத்தில் நடித்துக் கொடுத்தார். படக் குழுவினர் அனைவருக்கும் நன்றி.
என் மகன் என்பதற்காகச் சொல்லவில்லை. சிவா கொஞ்சம் சிரமப்பட்டுதான் இந்தப் படத்தில் நடித்தான், பல முயற்சிகள் செய்தான். அவன் உழைப்பிற்கு இந்தப் படம் கண்டிப்பாக வெற்றி பெறும். படத்தில் பணி புரிந்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்..” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *