• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

குழந்தைகளின் கல்விக்காக, மலைவாழ் மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும் மாவட்ட நிர்வாகம்

ByP.Thangapandi

Aug 28, 2024

குழந்தைகளின் கல்விக்காக, மலைவாழ் மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும் மாவட்ட நிர்வாகம் – முதற்கட்டமாக புதிய வீடுகள் கட்டி கொடுத்துள்ளதால் மலைவாழ் மக்கள் நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மொக்கத்தான்பாறை கிராமத்தில் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்த மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். மலை பகுதியில் தேன், கிழங்கு, மூலிகை பொருட்களை எடுத்து வந்து விற்பனை செய்து வாழ்வாதாரத்தை நடத்தி வரும் இம்மக்களின் குழந்தைகள் பெற்றோருடனே சென்று விடுவதால் அவர்களின் கல்வி பாதிப்படைந்து வந்தது.

இதை அறிந்த மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இந்த கிராமத்திற்கு நேரில் ஆய்வு செய்து மலைவாழ் மக்களின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப கோரிக்கை வைத்தார். அவரிடம் எங்கள் கிராமத்தில் முறையான அடிப்படை வசதிகள் இல்லை என்றும், வீடுகளும் சிதிலமடைந்த நிலையில் மழை காலத்தில் வீடுகளுக்குள் இருக்க முடியாத நிலை இருப்பது குறித்தும் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர்.

இக்கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று கொண்ட மாவட்ட ஆட்சியர் விரைவில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கைகள் எடுப்பதாகவும், அதற்கு கைமாறாக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புமாறு அன்பு கட்டளையிட்டார்.

அதன்படி முதற்கட்டமாக இக்கிராமத்தில் மாவட்ட பழங்குடியினர் நல திட்டத்தின் கீழ் தலா 4 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பீட்டிலும், ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மற்றும் தன்னார்வ அமைப்பின் உதவியுடன் சுமார் 6 லட்சம் மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் 10 புதிய வீடுகளை முதற்கட்டமாக கட்டி கொடுத்து விரைவில் பயனாளிகளின் வசம் ஒப்படைக்கப்பட உள்ளது. மேலும், இக்கிராமத்திலேயே பள்ளி, சாலை வசதி செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் நெகிழ்ச்சி அடைந்துள்ள மலைவாழ் மக்கள் மாவட்ட மற்றும் ஊராட்சி நிர்வாகத்திற்கும், முதலமைச்சருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்., மேலும் பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுத்தால் பள்ளி மாணவ மாணவிகளை பள்ளிக்கு அனுப்ப வசதியாக இருக்கும் என கோரிக்கை விடுத்தனர்.