விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஜமீன்நத்தம்பட்டியை சேர்ந்த பார்த்தசாரதி ( வயது 39). இவர் அப்பகுதியில் பேண்டேஜ் துணி தயார் செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார்.

இவருக்கு சொந்தமான சொகுசு காரில் தனது குடும்பத்தினருடன் சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் நடைபெறும் உறவினரின் காதணி விழாவுக்கு வந்துள்ளார்.
அங்குள்ள கோவில் பகுதிக்கு வந்து காரை நிறுத்திய போது காரில் இருந்து திடீரென கரும்புகை கிளம்பியது. உடனே காரை நிறுத்தி விட்டு காரில் உள்ள அனைவரும் இறங்கியுள்ளனர். அப்போது கார் மளமளவென தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது. காரிலிருந்து கரும்புகை வெளியேறி அப்பகுதியை புகை மண்டலமாக காட்சியளித்துள்ளது.
உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். ஆனால் அதற்குள் கார் முற்றிலும் எரிந்து சேதமாகியது.
புகை வரும்போதே அனைவரும் சுதாரித்து வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து இருக்கன்குடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




