விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள புலிக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த முத்துபாண்டி – பொன்னழகு தம்பதியருக்கு 1 பெண் குழந்தை மற்றும் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இதில் முத்துப்பாண்டி கடந்த 5 வருடங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்த நிலையில் தாய் பொன்னழகு வளர்ப்பில் 3 குழந்தைகளும் வளர்ந்து தாத்தா வீட்டில் வசித்து வருகின்றனர்.

இதில் தாத்தா, பாட்டி ஆகியோர் ஆடு மேய்க்கும் தொழிலிலும், தாய் பொன்னழகு விறகு வெட்டும் வேலையும் செய்து அன்றாட பிழைப்பு நடத்தி மிகவும் வறுமையில் வாடி வந்துள்ளனர். இதில் கஷ்டப்பட்டு மூன்று பிள்ளைகளையும் அரசு பள்ளியில் படிக்க வைத்து வந்துள்ளார் அவரது தாய் பொன்னழகு. அதில் மகள் பூமாரி திருச்சுழி சேதுபதி அரசு மேல்நிலைப்பள்ளியில் 2023-ம் ஆண்டு +2 படித்து 573 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அவருக்கு சிறு வயதிலிருந்து மருத்துவம் படிக்க ஆசையாக இருந்து வந்துள்ளது.
ஆனாலும் கூட நீட் தேர்வால் மருத்துவப் படிப்பில் சேர்வது கேள்விக்குறியானது. இந்நிலையில் தான் தற்போது தமிழக அரசு கொண்டு வந்துள்ள 7.5% இட ஒதுக்கீட்டில், பூமாரிக்கு மருத்துவப்படிப்பு கனவு நனவாகியுள்ளது.

மருத்துவப் படிப்பு பயில வேண்டும் என்ற பெரும் கனவில் இருப்பவர்களுக்கு நீட் தேர்வு மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது. இதை மத்திய அரசு நடைமுறைப்படுத்துவதற்கு முன்புவரை, தமிழ்நாட்டில் ஏராளமான கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள், ப்ளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று, மருத்துவராக முடிந்தது. ஆனால், தற்போது இதுபோன்ற மாணவர்களுக்கு நீட் தேர்வு பெரும் முட்டுக்கட்டையாக இருந்து, இவர்களின் மருத்துவக் கனவை சிதைப்பதாகப் பலரும் ஆதங்கப்படுகிறார்கள்.
ப்ளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றாலும்கூட, கிராமப்புற ஏழை எளிய மாணவர்களால் அதிகளவில் செலவு செய்து நீட் தேர்வுக்கான கோச்சிங் செல்ல முடிவதில்லை. இவற்றையெல்லாம் எதிர்கொண்டு ஒருவேளை நீட் தேர்வில் வெற்றி பெற்றாலுமே கூட, ரேங்க் அடிப்படையில் இவர்களுக்கு சீட் கிடைப்பதில்லை.
இந்த நிலையில் மாணவி பூமாரி சேலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் சுமார் 2 லட்சம் வரை வட்டிக்கு வாங்கி பணத்தை கட்டி மருத்துவப் படிப்பிற்கு தீரா பற்று கொண்டு நீட் தேர்வுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக தயாராகி வந்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற பல் மருத்துவம் படிக்க தேர்ச்சி பெற்றார். ஆனால் பல் மருத்துவம் படிக்க ஆர்வம் இல்லாததால் எம்.பி.பி.எஸ் படிக்க மிகுந்த ஆர்வம்l இருந்ததால் மீண்டும் நீட் பயிற்சி பெற்று தேர்ச்சியடைந்துள்ளார்.
இந்நிலையில் தான் தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் 7.5% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது. இந்த அரசாணைதான், புலிக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவி பூமாரியின் மருத்துவப் படிப்பு பயணத்துக்கு ஒளியேற்றி நீட் தேர்வில் 436 மதிப்பெண்கள் பெற்று தற்போது சென்னையில் நடைபெற்ற கலந்தாய்வில் பூமாரி (20) என்ற மாணவிக்கு சென்னை தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிக்க இடம் கிடைத்துள்ளது.
மேலும் புலிக்குறிச்சி கிராமத்தில் இருந்து முதல் மருந்துவராக எம்.பி.பி.எஸ் மருத்துவம் படிக்க தேர்வாகியுள்ள பூமாரி என்ற மாணவிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
இது குறித்து நீட் தேர்வில் வெற்றி பெற்று எம்பிபிஎஸ் படிக்க இருக்கும் மனைவி பூமாரி கூறும் போது
எனது தந்தை உயிரிழந்த நிலையில் நாங்கள் எங்கள் தாத்தா வீட்டில் வசித்து போகிறோம். எனது தாத்தா ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார், எனது அம்மா மற்றும் பாட்டி விறகு வெட்டும் வேலை செய்து வருகின்றனர். நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிற குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் .எனக்கு ஏற்கனவே பல் மருத்துவம் படிக்க இடம் கிடைத்தது, எனக்கு எம்பிபிஎஸ் படிக்க ஆசை இருந்ததால் நான் பல் மருத்துவம் படிக்க விரும்பவில்லை. மீண்டும் முயற்சி செய்து படித்தேன் தற்போது எனக்கு எம்பிபிஎஸ் சீட்டு கிடைத்துள்ளது.
நீட் என்பது ஒரு கஷ்டமானது இல்லை நம்மளுடைய முயற்சி கண்டிப்பாக இருக்க வேண்டும். எப்போதும் நாம் பாசிட்டிவ் திங்கிங் உடன் இருக்க வேண்டும் நாம் எம்பிபிஎஸ் ஆக வேண்டும் என்று லட்சியம் வைத்தால் கண்டிப்பாக சாதனை படைக்கலாம் என்றும், நான் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை எங்கள் ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் படித்து வந்தேன். பின்னர் திருச்சுழியில் உள்ள சேதுபதி அரசு மேல்நிலைப் பள்ளியில் 9 முதல் பிளஸ் டூ வரை படித்தேன். அப்போது அரசு இட ஒதுக்கீடு என்னை போன்ற கிராமப் பகுதி மாணவர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரமாக இருந்தது. எனது லட்சிய கனவு பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஒத்துழைப்போடு நிறைவேறி உள்ளது. நான் தான் எங்கள் ஊரில் முதல் எம்.பி.பி.எஸ். அது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. எங்கள் ஊரில் முதல் எம்பிபிஎஸ் என்பதனால் என் சொந்தக்காரங்க எல்லாருமே ரொம்ப பெருமையில் உள்ளனர். அதேபோல் நீட் தேர்விற்கு தேவைப்படும் மாணவர்களுக்கு நான் ஆலோசனையும் வழங்கி அவர்களையும் என்னை போன்ற மருத்துவர்கள் ஆக உருவாக்க பாடுபடுவேன். மேலும் எனது மருத்துவ படிப்பை முடித்து கிராமப்புற மருத்துவ மேம்பாட்டுக்காக பணியாற்றுவேன் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
எங்களது குடும்பம் மிகவும் கஷ்டப்படுகிற குடும்பம் அன்றாட பிழைப்புக்கு வசதி இல்லாமல் உள்ளது. எனது குடும்ப சூழ்நிலையை கருதி தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் எனவே மருத்துவ படிப்பிற்கு உதவி செய்தால் நான் படித்து மென்மேலும் வளர்ந்து சேவை செய்வேன் என கோரிக்கை வைக்கிறார் கிராமத்து முதல் மருத்துவ மாணவி குமாரி.