• Sun. May 19th, 2024

தற்காலிகமாக ரூ.7,033 கோடி ஒதுக்கக் கோரி.., பிரதமரிடம் முதலமைச்சர் வலியுறுத்தல்..!

Byவிஷா

Dec 20, 2023

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு, சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக தற்காலிகமாக ரூ.7,033 கோடி ஒதுக்கக் கோரி, பிரதமர் மோடியிடம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் உள்ள பிரதமரின் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, பிரதமரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை மனுவை வழங்கினார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
“இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை டிச.19 டெல்லியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து, மிக்ஜாம் புயல் கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு விரைந்து நிதி ஒதுக்கீடு செய்யக் கோரியும், தென் மாவட்டங்களில் தற்போது பெய்த அதி கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள், மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்தும் எடுத்துரைத்து, அப்பாதிப்புகளை சீரமைத்திட தேவையான நிதியினை விரைந்து ஒதுக்கீடு செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு கோரிக்கை மனுவினை அளித்தார்.
மிக்ஜாம் புயல் கனமழையால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்து மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது குறித்தும், புயல் மழையால் சாலைகள், பாலங்கள், பள்ளிக் கட்டடங்கள், அரசு மருத்துவமனைகள் போன்ற பொதுக் கட்டமைப்புகளும், மின்சார உட்கட்டமைப்புகளும், உள்ளாட்சி அமைப்புகளில் குடிநீர் கட்டமைப்புகள் கிராம சாலைகள் போன்றவைகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், தமிழ்நாடு அரசு மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டதால் பாதிப்பிற்குள்ளான பகுதிகளில் மிக விரைவாக இயல்பு நிலை திரும்பியது குறித்தும் தமிழக முதலமைச்சர், இந்தியப் பிரதமருக்கு எடுத்துரைத்தார்.

மேலும், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், டிசம்பர் 07- ஆம் தேதி அன்று சென்னைக்கு வருகை தந்து, ‘மிக்ஜாம்’ புயல் பெருமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தது குறித்தும், ஒன்றிய அரசின் பல்துறை ஆய்வுக் குழு, டிசம்பர் 12 மற்றும் டிசம்பர் 13 ஆகிய நாட்களில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து, அக்குழு தன்னுடன் ஆலோசனை மேற்கொண்டது குறித்தும் எடுத்துரைத்ததுடன், தமிழ்நாடு அரசு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொண்டதற்கு அக்குழு பாராட்டு தெரிவித்ததையும் குறிப்பிட்டு, சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக தற்காலிக நிவாரணத் தொகையாக 7,033 கோடி ரூபாயும், நிரந்தர நிவாரணத் தொகையாக 12,659 கோடி ரூபாயும் கோரப்பட்டதை தெரிவித்து, அந்நிதியினை விரைந்து ஒதுக்கீடு செய்யுமாறு இந்தியப் பிரதமரிடம் தமிழக முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *