• Mon. Mar 17th, 2025

100 நாள் வேலைதிட்டத்திற்கான ஊதியத்தை உயர்த்தியது மத்திய அரசு

Byவிஷா

Mar 28, 2024

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டமான 100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
கடந்த 2006 ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் இந்திய அரசால் கொண்டு வரப்பட்டது. 100 நாள் வேலை திட்டம் என்னும் மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்ட இந்த திட்டத்தின் நோக்கம் என்னவென்றால் கிராமப்புற மக்களுக்கு வேலை வழங்குவதாகும்.
இந்த திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளருக்கான ஊதிய விகிதத்தை மத்திய அமைச்சகம் தொழிலாளர்கள் ஊதிய சட்டம் பிரிவு 6(உ)-ன் கீழ் நிர்ணயம் செய்து வருகிறது. இந்நிலையில், இந்த திட்டத்திற்கான ஊதியத்தை உயர்த்தியதற்கான அரசாணையை இந்திய அரசு வெளியிட்டுள்ளது.
தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமுலில் இருக்கும் நிலையில் தேர்தல் ஆணையத்தின் அனுமதியை பெற்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலும் 100 நாள் வேலைக்கான ஊதியத்தை உயர்த்தி உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஊதியமானது ரூ.294 வழங்கப்படும் நிலையில் ரூ.319 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக அரியானா, சிக்கிம் மாநிலங்களில் ரூ.374 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.