• Fri. Apr 26th, 2024

உக்ரைனில் உயிரிழந்த மாணவர் உடல் பெங்களூரு வந்தடைந்தது..

உக்ரைனில் உயிரிழந்த மாணவர் நவீனின் உடல் பெங்களூரு வந்தடைந்தது.

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் தொடர்ந்து 4-வது வாரமாக நீடித்து வருகிறது. மார்ச் 1-ம் தேதி ரஷ்ய படையினர் உக்ரைன் மீது நடத்திய தாக்குதலில் எதிர்பாராத விதமாக கர்நாடக மாநிலம் சலகேரியைச் சேர்ந்த நவீன் என்ற மருத்துவ மாணவர் உயிரிழந்தார். நவீன் கார்கிவ் நகரில் செயல்படும் மருத்துவக் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வந்தார். மார்ச் 1-ம் தேதி சூப்பர் மார்க்கெட்டில் பொருள்கள் வாங்க சென்ற போது ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் பலியானார். அவரது உடல் பதப்படுத்தப்பட்டு கார்கிவ் சவக்கிடங்கில் வைக்கப்பட்டு இருந்தது.

இதனை தொடர்ந்து மாணவரின் உடலை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டிருந்தார் .அவரது உடலை இந்தியா எடுத்துவர வெளியுறவுத்துறை தீவிர முயற்சியில் இறங்கியது. அதன் பலனாக மாணவர் நவீனின் உடல் இன்று காலை 3.15 மணிக்கு விமானம் மூலம் பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. நவீன் உடல் அவரது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, நவீனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். உடலை மீட்டு கொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொண்ட பிரதமர் மோடிக்கு பசவராஜ் பொம்மை நன்றி தெரிவித்தார். இங்கிருந்து நவீனின் உடல் அவரது சொந்த ஊரான ஹாவேரி மாவட்டம் ராணிபென்னூர் தாலுகா சலகேரி கிராமத்திற்கு எடுத்து செல்லப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *