சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் நேற்று பா.ஜ.க சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெரியார், அண்ணா, கலைஞர் மற்றும் முதல்வர் குறித்து அவதூறாக பேசிய பா.ஜ.க நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக நிர்வாகிகள் சார்பில் எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.
நேற்று மாலை சிவகங்கை அரண்மனைவாசல் முன்பு பா.ஜ.க சார்பில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சக்திவேல் நகர தலைவர் உதயா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய நகர தலைவர் உதயா மற்றும் சரவணன் ஆகியோர் பெரியார், அண்ணா, கலைஞர், மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்து தகாத வார்த்தைகளால் பேசியதுடன் அரசையும் விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த பேச்சுகள் அடங்கிய வீடியோக்களை சமூக வலைதளங்களிலும் பதிவேற்றம் செய்ததாகவும் கூறப்படும் நிலையில் அதனை கண்டித்தும் அதேபோல் தலைவர்கள் குறித்து அவதூறாக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிவகங்கை திமுக நகர செயலாளரும் நகர்மன்ற தலைவருமான சி.எம்.துரை ஆனந்த் தலைமையில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் சிவகங்கை எஸ்.பி அலுவலகம் வந்து எஸ்.பி அரவிந்தனிடம் புகார் மனு அளித்தனர்.