தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு “நம்மை காக்கும் 48” என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டது.


இந்தத் திட்டத்தின் நோக்கம் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு 48 மணி நேரத்தில் சிகிச்சை வழங்கி முடிப்பதே இலக்கு என அறிவிக்கப்பட்டது.

முன்பெல்லாம் அவசர சிகிச்சை வார்டுக்கு அபாய நிலையில் வரும் நோயாளிகளுக்கு அங்குள்ள மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை செய்து, நோயாளி பாதிக்கப்பட்ட தன்மையை அறிந்து அதற்குரிய சிறப்பு மருத்துவர் வரவழைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ஆனால் இந்த நம்மை காக்கும் 48 திட்டத்தில் அவசர சிகிச்சை வார்டில் பணியாற்றும் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு உடனடியாக அவர்களின் நோய்க்கு தகுந்தவாறு சிகிச்சையை மேற்கொள்ளும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் 50க்கும் மேற்பட்ட பல்துறை சிறப்பு அரசு மருத்துவர்கள், தேனி அரசு மருத்துவகல்லூரிக்கு வந்துள்ளனர்.
அவசர சிகிச்சை வார்டில் வரும் நோயாளிகளுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்க வேண்டும், நோயாளிகளின் பாதிப்புக்கு ஏற்ப உடனடியாக சிகிச்சையை தொடங்குவது எப்படி என்பது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் படிக்கும் மருத்துவ மாணவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த செயல்முறை விளக்கமானது இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெற உள்ளதாக தெரிவித்த தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் முத்து சித்ரா, தமிழக அரசின் நம்மை காக்கும் 48 திட்டத்தின் கீழ், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றும் 5 மருத்துவர்கள் மூலம் கடந்த மூன்று ஆண்டுகளில் 48 ஆயிரம் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.




