• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தவெக தலைவர் விஜய்யை – பிரசாந்த் கிஷோர் சந்திப்பு

ByPrabhu Sekar

Feb 11, 2025

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை தேர்தல் உத்தி வகுப்பாளரும், பிகார் மாநிலத்தில் ‘ஜன் சுராஜ்’ என்ற கட்சியின் தலைவருமான பிரசாந்த் கிஷோர் நேற்று (பிப்ரவரி 10) சென்னையில் சந்தித்திருக்கிறார்.

சென்னை நீலாங்கரையில் இருக்கும் விஜய்யின் வீட்டில் நேற்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கிய இந்த சந்திப்பு சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் நீடித்திருக்கிறது.

ஆதவ் அர்ஜுனா ஏற்பாடு

பிரசாந்த் கிஷோர் ஐ பேக் என்கிற தேர்தல் உத்தி வகுப்பு நிறுவனத்தை நடத்தி வந்தார். பிறகு கட்சிகளுக்கு ஆலோசனை கூறுவதை நிறுத்திவிட்டதாக அறிவித்து புதிய கட்சியை தொடங்கினார். எனினும் அவர் தொடர்ந்து கட்சிகளுக்கு தேர்தல் ஆலோசனைகளை வழங்கி வருகிறார். இந்த நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் அதிமுக கட்சியுடன் பிரசாந்த் கிஷோர் ஒப்பந்தம் செய்ய இருக்கிறார் என்று தொடர்ந்து தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில்தான் அவர் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயை சந்தித்துள்ளார்.

மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் கடந்த ஜனவரி 30 ஆம் தேதி பாட்னா டு பட்டினப்பாக்கம் ஆதவ் அர்ஜுனாவின் ஆட்டத்தை மாற்றிய பிரசாந்த் கிஷோர் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

அதில் ஜனவரி 16ஆம் தேதி ஆதவ் அர்ஜுனா பாட்னாவில் பிரசாந்த் கிஷோரை சந்தித்தார் என்றும் அந்த சந்திப்பில் நடந்த விபரங்கள் குறித்தும் குறிப்பிட்டிருந்தோம்.

இந்தப் பாட்னா சந்திப்பின் அடிப்படையில் தான் ஆதவ் அர்ஜுனா சென்னையில் விஜய்யை சந்தித்து கட்சியில் இணைந்தார். உடனடியாக பொதுச் செயலாளர் பதவியையும் பெற்றார்.

பிரசாந்த் கிஷோர் -விஜய் தனிப்பட்ட சந்திப்பு!

இந்த பின்னணியில் ஆதவ் அர்ஜுனாவுடைய ஏற்பாட்டின்படி தான் விஜய்யை நேற்று சந்தித்து பேசி இருக்கிறார் பிரசாந்த் கிஷோர். இந்த சந்திப்பில் என்ன நடந்தது என்று விசாரித்த போது…

“சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த சந்திப்பில்… விஜய், பிரசாந்த் கிஷோர், ஆதவ் அர்ஜுனா, புஸி ஆனந்த், ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். கடைசி 15, 20 நிமிடங்களில் விஜய், பிரசாந்த் கிஷோர், ஆதவ் அர்ஜுனா மட்டும் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

அப்போது பிரசாந்த் கிஷோர், ‘என்னை இன்னமும் அனைவரும் அரசியல் ஆலோசகராகத்தான் பார்க்கிறார்கள். நான் பிகாரில் ஒரு கட்சியை நடத்தி வருகிறேன். என்னை ஒரு கட்சியின் தலைவராகவும் பாருங்கள்’ என கூறியிருக்கிறார். Prashant Kishor advice to Vijay
மேலும், ‘தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாட்டில் பழம்பெரும் கட்சிகளுக்கெல்லாம் ஒரு அதிர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாகி இருக்கிறது. ஆனால் இந்த அதிர்வுகள் தொடர வேண்டும் என்றால் கட்சியை தொடர்ந்து சரியான திசையில் கொண்டு செல்ல வேண்டும்.

தவெக கூட்டணி யாரோடு?

2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி பற்றிய உங்களின் முடிவை விரைவில் தெரிந்து கொள்ள திமுக ஆர்வமாக இருக்கிறது. அது பற்றி உங்களை அவர்கள் பேச வைக்க முயற்சிப்பார்கள். பத்திரிகையாளர்களும் உங்களிடம் கேள்வி கேட்பார்கள். இப்போதைக்கு கூட்டணி பற்றி குறிப்பாக அதிமுக கூட்டணி பற்றி எந்த ஒரு கருத்தையும் நீங்கள் வெளிப்படுத்த வேண்டாம்’ என விஜய்க்கு பிரசாந்த் கிஷோர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

பிரசாந்த் கிஷோர் அதிமுகவுக்காக பணியாற்ற இருக்கிறார் என செய்திகள் வெளிவந்த நிலையில், இந்த சந்திப்பின் மூலம் அவர் அதிமுக-தவெக கூட்டணிக்கு முயற்சிக்கிறாரா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. Prashant Kishor advice to Vijay

விஜய் உடனான சந்திப்பு முடிந்த பிறகு ஆதவ் அர்ஜுனாவின் வீட்டுக்கு சென்றார் பிரசாந்த் கிஷோர். அங்கேயும் ஆலோசனைகள் தொடர்ந்தன” என்கிறார்கள் தவெக வட்டாரங்களில்.