• Sat. Mar 28th, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

முதுகில் குத்தியவர்களுக்கு நன்றி – அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ முகநூல் பதிவு..,

பழனி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், முதுகில் குத்தியவர்களுக்கு நன்றி எனத் தனது முகநூல் பக்கத்தில் முன்னாள் எம்.எல்.ஏ வேணுகோபாலு பதிவிட்டுள்ளது அதிமுகவினரிடயே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்றத் தொகுதியில் கடந்த 2011-ஆம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் வேணுகோபாலு. கடந்த 2016 மற்றும் 2021 தேர்தல்களில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படாத நிலையில், இந்த 2026 தேர்தலிலாவது வாய்ப்பு கிடைக்கும் எனப் பெரிதும் எதிர்பார்த்திருந்தார். இதற்காக சுமார் 3000-க்கும் மேற்பட்ட நாட்கள் காத்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், தற்போது மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், தன்னைப் பழனி மக்களின் பணிக்காக மீண்டும் வாய்ப்பு வரும் என நம்பி காத்திருந்ததாகவும், ஆனால் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக அந்தப் பதிவின் இறுதியில், என்னை நம்ப வைத்து என் முதுகில் குத்தியவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்; வினை விதைத்தவன் வினை அறுப்பான் என அவர் பதிவிட்டுள்ளது, யாரை மறைமுகமாகச் சாடுகிறார் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. மேலும் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அடுத்த முதலமைச்சராக வர வாழ்த்து தெரிவித்துள்ள அவர், தனது மக்கள் பணி தொடரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டணிப் பேச்சுவார்த்தை மற்றும் வேட்பாளர் அறிவிப்பு வெளியாகி வரும் நிலையில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரின் இந்தப் பதிவு பழனி அதிமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.