ஜவுளி ரகங்களுக்கு வரி விதிப்பை 5%- லிருந்து 12%- மாக ஒன்றிய அரசு உயர்த்தியுள்ளது. இதனை கண்டித்து ஈரோட்டில் ஜவுளி வணிகர்கள் இன்று ஒரு நாள் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
ஏற்கனவே நூல் விலை மற்றும் மூல பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில் ஜி.எஸ்.டி வரி உயர்வால் தொழில் மேலும் பாதிக்கப்படும் என ஜவுளி வணிகர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஈரோட்டில் மொத்த ஜவுளிக்கடைகள் அதிகம் உள்ள ஈஸ்வரன் கோவில் வீதி, டி.வி.எஸ் வீதி உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து ஜவுளி விற்பனை நிறுவனங்களும் அடைக்கப்பட்டுள்ளன.
இதனால் இன்று ஒருநாள் மட்டும் சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பிலான ஜவுளி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கரூர் மாநகராட்சி உட்பட்ட காமராஜபுரம், செங்குந்தபுரம், ராமகிருஷ்ணாபுரம், மகாத்மா காந்திசாலை ஆகிய பகுதிகளில் பின்னலாடை உற்பத்தியாளர்கள் இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அங்குள்ள சுமார் 200 கடைகள் மூடப்பட்டுள்ளன. வரி உயர்வால் ஜவுளி ரகங்களின் விலை உயர்ந்து பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என ஜவுளி வணிகர்கள் தெரிவித்துள்ளனர். எனவே ஒன்றிய அரசு ஜி.எஸ்.டி வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தினர் .
அடுத்த கட்டமாக தொடர் போராட்டம் நடத்தவும் ஜவுளி துறையினர் திட்டமிட்டுள்ளனர்.