லண்டனில் இருந்து ஸ்டாலின் அவசர ஆலோசனை!
பின்னணி இதுதான்!
அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரியவும், பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதி தேர்வில் (‘டெட்’) தேர்ச்சி பெறுவது கட்டாயம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு ஆசிரியர் சமுதாயத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்துக்கும், பதவி உயர்வுக்கும் ‘டெட்’ தகுதித் தேர்வை கட்டாயமாக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து பல்வேறு ஆசிரியர்கள் கூட்டமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டிருந்தன.
இந்த மேல் முறையீட்டு மனுக்கள் செப்டம்பர் 2 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபாங்கர் தத்தா, மன்மோகன் அமர்வில் இந்த வழக்கு விசாரணை நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிள் கொடுத்த தீர்ப்புதான் இன்று இந்தியா முழுதும் ஆசிரியர் சமுதாயத்தினர் மத்தியில் பேசுபொருளாக உள்ளது.
“கட்டாயக் கல்வி உரிமை சட்டம் வருவதற்கு முன்பாக 20 அல்லது 30 ஆண்டுகள் பணியில் உள்ள ஆசிரியர்ககளை ‘டெட்’ தேர்வை எழுதி தகுதி பெறச் சொல்வது பொருத்தமாக இருக்காது என்பதால், உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, பணிக்காலம் 5 ஆண்டுகள் மட்டுமே உள்ள ஆசிரியர்களுக்கு டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதில் இருந்து விலக்கு அளிக்கிறோம்.
அதேநேரம் 5 ஆண்டுகளுக்கு குறைவான பணிக்காலம் கொண்ட ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற விரும்பினால் கட்டாயம் ‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
ஆனால், கட்டாயக் கல்வி உரிமை சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாக ஆசிரியராக பணியில் சேர்ந்து 5 ஆண்டுகளுக்கு மேல் பணிக்காலத்தை கொண்ட ஆசிரியர்கள் அடுத்த 2 ஆண்டுகளுக்குள் கட்டாயம் ‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
இதில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும். அவர்களை ஓய்வு பெற்றவர்களாக கருதி, ஓய்வூதிய பலன் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
மாற்றுத் திறன் உள்ளிட்ட குறைபாடுகளால் ‘டெட்’ தேர்வை எழுத முடியாத ஆசிரியர்களின் கோரிக்கையை மாநில அரசுகள் பரிசீலிக்கலாம். ஆசிரியர் பணியில் சேர விரும்பும் ஒவ்வொருவரும், பதவி உயர்வை விரும்பும் ஆசிரியர்களும் கட்டாயம் ‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெற்று முழு தகுதியுடையவர்களாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியராக பணியில் தொடர முடியாது” என்பதுதான் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு.
இந்த தீர்ப்பால் தமிழ்நாட்டில் இருக்கும் ஒன்றரை லட்சம் ஆசிரியர்களின் பணிக்கு பாதுகாப்பில்லாத சூழல் உருவாகிவிட்டதாக, ஆசிரியர் சங்கங்கள் அச்சம் வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் இந்தத் தீர்ப்பு குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செப்டம்பர் 4 ஆம் தேதி ஆசிரியர் சங்கங்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை செயலர் பி.சந்திரமோகன், இயக்குநர்கள் ச.கண்ணப்பன், பூ.ஆ.நரேஷ் உட்பட அலுவலர்கள் மற்றும் 36 ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பேசும்போது, “உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் ஆசிரியர்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. தமிழக அரசு எப்போதும் உங்களுக்கு துணை நிற்கும். இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு விரைவில் உரிய தீர்வு காணப்படும்” என்றார்.
இந்தக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்,
“உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தில் கேள்விக்குறியை எழுப்புவதாக அமைந்துள்ளது. லண்டனில் இருந்தவாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது ஆசிரியர்களுக்கு சிறப்பு தேர்வை நடத்துவது குறித்து பரிசீலனை செய்து வருவதாக அவரிடம் தெரிவித்தோம். ஆனால், முதல்வரோ ஆசிரியர் சங்கங்களை அழைத்து அவர்களின் கருத்துகளை கேளுங்கள் என்றார்.
அதன்படி தற்போது நடத்தப்பட்ட கூட்டத்தில் ஒவ்வொரு விதமான கருத்துகளை ஆசிரியர் சங்கங்கள் கூறியுள்ளனர்.
நமது அடுத்தகட்ட நடவடிக்கையின் சாதகம், பாதகம் குறித்தும் பேசினோம். இதில் அரசியல் செய்யாமல் ஆசிரியர்களை பாதுகாக்கவே விரும்புகிறோம். எனவே, உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யலாமா, சிறப்பு டெட் தேர்வு நடத்தலாமா என்பது தொடர்பாக ஆலோசித்துள்ளோம்.
இதில் பெறப்பட்ட கருத்துகளை முதல்வரிடம் தெரிவிப்போம். அவரின் அறிவுறுத்தலின்படி அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்” என்றார்.
தமிழ்நாட்டில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் வர இருக்கிறது. இந்நிலையில் ஆசிரியர்களில் பெரும்பாலானோர் திமுகவுக்குதான் வாக்களிக்கும் நிலையில் இருந்தனர். ஏற்கனவே பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்று வாக்குறுதியளித்த திமுக, அதை நிறைவேற்றவில்லை.
இதனால் திமுக மீது ஆசிரியர்கள் கொதிப்பில் இருக்கிறார்கள்.
இந்நிலையில் டெட் தேர்வு விவகாரத்திலும் திமுக அரசு தங்களுக்கு சாதகமாக எதுவும் செய்யவில்லை என்றால் ஒட்டுமொத்தமாக ஆசிரியர்கள் அவர்களின் குடும்பத்தினரின் ஓட்டு திமுகவுக்கு கிடைக்காது என்பதால்தான் லண்டனில் இருந்து இதுகுறித்து ஆலோசனை நடத்தியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
