அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கைக்கு ஆசிரியர்கள் உரிய பங்களிப்பை அளிக்க வேண்டும் என மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய தொழிலதிபர் டத்து டத்தோ பிரகதீஷ் குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டத்தில் உள்ள வட்டார கல்வி அலுவலர்கள் அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்கையை அதிகரிக்கும் நோக்கில் , தனியார் பள்ளி மாணவர்கள் போன்று பெல்ட், டை, அணிந்து வருதல் மற்றும் பெற்றோர்கள் அறியும் வகையில் டைரி நோட்டுகள் பராமரித்தல் போன்றவைகளை பள்ளி மாணவர்களுக்கும் வழங்கி ஊக்குவிக்க, நன்கொடையாளர்களை அணுகியுள்ளனர். இந்த நிலையில் பூலாம்பாடியை சேர்ந்த பன்னாட்டு தொழில் அதிபர் டத்தோ பிரகதீஸ்குமார், பூலாம்பாடி உட்பட 15 பள்ளி களில் படிக்கும் மாணவர்களுக்கு இப்பொருட்களை அரசு முத்திரையுடன் தனது சொந்த செலவில் வழங்குவதாக தெரிவித்தார் அதன் அடிப்படையில், இன்று பூலாம்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், மாணவ, மாணவிகளுக்கு டை ,பெல்ட், டைரி உள்ளிட்ட பொருட்கள் முதல்கட்டமாக வழங்கும் நிகழ்சி நடைபெற்றது, இதில் கலந்து கொண்ட தொழிலதிபர் டத்தோ பிரகதீஷ் குமார் பேசும் போது, தற்போது அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை குறைந்துள்ளது என்பது வருத்தப்பட வேண்டிய விஷயமாக உள்ளது. ஆகவே இதனை அதிகரிக்க பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளையும் அரசு பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க வேண்டும். அப்போதுதான் பொதுமக்களுக்கு இது ஒரு முன் உதாரணமாக அமையும், மேலும் நீங்கள் கொடுக்கும் உத்திரவாதம் தான் அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் முன்வருவார்கள் என தெரிவித்தார். இதனையடுத்து அவர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு டைரி, பெல்ட் , டை ஆகிய பொருட்களை வழங்கினார்.
இந்நிகழ்வின் போது, வட்டார கல்வி அலுவலர் அம்சவள்ளி, வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர் கீர்த்தனா, தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பள்ளி மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.