• Wed. Feb 12th, 2025

உலகம் சுற்றிய தேநீர் கடை வியாபாரி காலமானார்…

Byகாயத்ரி

Nov 20, 2021

மனைவியுடன் உலகம் முழுவதும் பயணித்த பிரபல தேநீர் வியாபாரி கே.ஆர்.விஜயன் காலமானார்.கேரள மாநிலம் கொச்சியில், டீக்கடையை நடத்தி வந்தவர் கே.ஆர்.விஜயன் (71). இவரது மனைவி மோகனா (69). இவர்களுக்குத் திருமணமாகி 45 ஆண்டுகள் ஆகின்றன. இந்த தம்பதியருக்கு சிறுவயதில் இருந்தே உலகைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. கடந்த 1963ஆம் ஆண்டு, தேநீர்க்கடை ஒன்றை ஆரம்பித்த விஜயன், அதன் மூலம் பெற்ற வருமானத்தை தமது உலகம் சுற்றும் கனவுக்காக சேர்த்து வைத்தார்.


தேநீர்க்கடை வியாபாரத்தில் சம்பாதித்த பணத்தைக் கொண்டு விஜயன் தனது மனைவி மோகனாவுடன், அமெரிக்கா, பிரேசில், அர்ஜெண்டினா, பெரு உள்ளிட்ட பல நாடுகளுக்கும் சென்று வந்துள்ளார். தேநீர்க்கடை வியாபார வருமானத்தை மட்டும் வைத்து, கடந்த 40 ஆண்டுகளில், 26 நாடுகளை விஜயன் – மோகனா தம்பதியர் சுற்றிப் பார்த்துள்ளனர். கடைசியாக, கடந்த அக்டோபர் மாதத்தில் ரஷ்ய நாட்டிற்கு சென்றுவந்தனர்.


இவர்களது உலகம் சுற்றும் பயணம் ஊடகங்களில் வெளியாகி வைரலானது. இதையறிந்த மகிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகிந்தரா, விஜயன் – மோகனா தம்பதியின் வெளிநாட்டுப் பயணத்திற்கு உதவியும் செய்துள்ளார். இந்நிலையில், உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக, கே.ஆர்.விஜயன் இன்று காலமானார். அவரது மறைவுக்கு பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.