தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு என மும்மொழிகளில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
தமிழ்நாடு முழுவதும் முதலமைச்சர் முக.ஸ்டாலினின் 72-வது பிறந்தநாளை திமுகவினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை தொண்டர்களை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து பெற்றார். அதேபோல், இன்று காலை வீட்டில் மனைவி துர்கா ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கிருத்திகா உதயநிதி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுடன் முதல்வர் முக.ஸ்டாலின் கேக் வெட்டி மகிழ்ந்தார்.
இதைத்தொடர்ந்து பெரியார், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதற்கிடையே திமுக தலைவரும், முதலமைச்சர் முக.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 2025-26ஆம் கல்யாண்டுக்கான மாணவர் சேர்க்கையை முதல்வர் தொடங்கி வைத்து, மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். மேலும், முதல்வரின் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி, ராகுல் காந்தி, விஜய் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தான், முதலமைச்சர் முக.ஸ்டாலினுக்கு மும்மொழியில் முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில், தமிழ், ஆங்கிலம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு மும்மொழிக் கொள்கையை ஏற்காது என முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில், தமிழிசை அவரை சீண்டியுள்ளார்.
முதலமைச்சருக்கு மும்மொழியில் வாழ்த்து தெரிவித்த தமிழிசை








