• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஞானசேகரனுக்கும், திமுகவுக்கும் எந்த சம்பந்தமில்லை: அமைச்சர் ரகுபதி பரபரப்பு பேட்டி

ByP.Kavitha Kumar

Dec 26, 2024

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கும் திமுகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பாலியல் வன்கொடுமை வழக்கில் 6 மணி நேரத்திற்குள்ளாகவே குற்றவாளியை கைது செய்திருக்கிறோம். வழக்கில் கைதான ஞானசேகரன் திமுகவின்அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது. அவர் திமுக நிர்வாகி என பரப்பப்படும் தகவல்கள் முற்றிலும் தவறானது. அவருக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

பாலியல் வன்கொடுவழக்கை மூடி மறைக்க வேண்டிய அவசியம் திமுகவுக்கோ, முதலமைச்சருக்கோ கிடையாது. இந்த வழக்கின் விசாரணை வெளிப்படையாக நடைபெற்று வருகிறது. தவறு செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குற்றவாளிக்கு உரிய தண்டனை நிச்சயமாக பெற்றுத் தரப்படும் என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், பாஜக ஆளும் மாநிலங்களில்தான் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகம் நிகழ்ந்துள்ளன. பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமென்று ஒன்று இந்தியாவில் இருக்கிறது என்றால், அது தமிழ்நாடுதான். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தேசிய சராசரியை விட தமிழ்நாட்டில் குறைவு. பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் தைரியமாக புகார் அளிக்க முன்வரலாம். ராமேஸ்வரத்தில் உடை மாற்றும் அறையில் கேமரா வைத்த விவகாரத்தில் கைதானவர் அதிமுக பிரமுகரின் மகன். அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சி வழக்கை எப்படி நடத்தினர் என்பது எல்லோருக்கும் தெரியும். திமுகவின் தவறு செய்வோர் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை நாங்கள் வெளியிடவில்லை; அதை வெளியிட வேண்டிய அவசியமும் இல்லை.
விவரங்கள் வெளியிட்டால் பாதிக்கப்பட்ட பெண் எப்படி தைரியமாக புகார் அளித்திருப்பார்? பாலியல் வன்கொடுமை வழக்கை அரசியலாக்க நினைத்தால்
அது நடக்காது என்று அவர் கூறினார்.