இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதார மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-26-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், “தமிழ்நாடு கல்வியில், சுகாதாரத்தில், வேலைவாய்ப்பில், வேளாண்மையில், தொழில் துறையில் இன்று சிறந்து விளங்குவதற்கான விதைகள், நூறு ஆண்டுகளுக்கு முன்பே நீதிக்கட்சியின் ஆட்சியில் விதைக்கப்பட்டவை.
இந்தியாவில் தொழில் வளர்ச்சிக்கு வேறு சில மாநிலங்களோ முக்கியத்துவம் கொடுத்தன. ஆனால் தமிழ்நாடு மட்டுமே, கல்வி, வறுமை ஒழிப்பு, சுகாதாரம், தொழில் வளர்ச்சி என பன்முக வளர்ச்சியை இலக்காக கொண்டு முன்னேற தொடங்கி வெற்றியைக் கண்டது. அனைவருக்கும் அடிப்படை கல்வி என்பதை நீண்ட கால இலக்காக கொண்டு நாடு நகர்ந்து கொண்டிருந்த காலக்கட்டத்தில், கிராமம்தோறும் கல்விக் கூடங்களை உருவாக்கியது நாம் தான். மழலை குழந்தைகளுக்கான மத்திய உணவு திட்டம், சத்துணவு திட்டம், காலை உணவு திட்டம் என்று தமிழ்நாடு அறிமுகப்படுத்திய மக்கள் நலத்திட்டங்களை பார்த்து இந்திய நாடு மட்டுமல்ல உலக நாடுகளே வியந்து பாராட்டியுள்ளது.
ஏழை எளிய மக்களுக்காக குடியிருப்புகள் உருவாக்க தனி வாரியம் உருவாக்கியவர் கருணாநிதி. முன்னோடியாக மக்களுக்கு, மகளிருக்கு, வாக்குரிமை வழங்கிய சென்னை மாகாணம் காட்டிய வழியில், பிற்காலத்தில் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கிய முன்னணி மாநிலங்களின் பட்டியலியல் தமிழ்நாடும் இடம்பெற்றது. இருமொழி கொள்கை தொடர்ந்து சமரசமின்றி முன்னெடுக்கப்படும். இதுவரை திருக்குறள் 28 இந்திய மொழிகளிலும், 35 உலக மொழிகளிலும் மொழிப்பெயர்க்கப்பட்டிருக்கிறது. இன்னும் 28 மொழிகளில் திருக்குறள் மொழிப்பெயர்க்கப்படவிருக்கிறது. இருமொழி கொள்கை தொடர்ந்து சமரசமின்றி முன்னெடுக்கப்படும்.
தமிழ்நாட்டில் அதிவேகமாக வளர்ந்து வரும் நகரங்களின் வளர்ச்சி முறைப்படுத்தப்பட வேண்டும். பெருமளவு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் தொழிற்ச்சாலைகள் தமிழ்நாடு எங்கும் பரவலாக உருவாக வேண்டும். நவீன கட்டமைப்பு வசதிகள் உருவாகும்போது பசுமையாற்றல் வளங்களையும் முறையாக பயன்படுத்திட வேண்டும். இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இது எதிர்கால வளர்ச்சிக்கான நிதிநிலை அறிக்கையாகும்” என்று கூறினார்.