தமிழகத்திற்கான உரிமைகளை நெஞ்சை நிமிர்த்தி ஒன்றிய அரசிடம் நியாயமாக கேட்கிறோமே தவிர மற்றவர்கள் போல் கூனு கும்பிடு போடவில்லை என அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

மண், மொழி, இனம் காக்க தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்கும் வகையில் ஓரணியில் தமிழ்நாடு என்ற முழக்கத்தை முதல்வர் தொடங்கியுள்ளது.
இது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி நேற்று நாகப்பட்டினத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: ஒன்றிய அரசு மாநில அரசை எவ்வாறு வஞ்சிக்கிறது என்பதை எடுத்துக் கூறவே முதல்வர் ஓரணியில் தமிழ்நாடு தொடங்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக தமிழ் இனமாக மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இது மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
ஒட்டுமொத்தமான இந்தியாவிற்கு பலவிதமான பலன்களை தமிழகம் தந்து வருகிறது. ஆனால் தமிழகத்தின் உரிமைகளை ஒன்றிய அரசு பறித்து வருகிறது. மண் சார்ந்து கீழடி உண்மைத்தன்மை தரவுகளை ஒன்றிய அரசு அங்கீகரிக்க மறுப்பதுடன், கூட்டாட்சி தத்துவத்தையும் புறகணித்து வருகிறது.பாஜக ஆளும் மாநிலங்களில் பாசிசத்தை திணித்து, கை பாவையாக வைத்துக் கொண்டு பரிசோதனை கூடங்களாக மாற்றிக்கொண்டு வருகிறது.தமிழகத்தையும் மாற்ற ஒன்றிய அரசு துடித்து கொண்டிருக்கிறது.
அதேபோல பாஜக தமிழகத்தில் ஏதாவது ஒரு கட்சியை இணைத்துக் கொண்டு இங்கு கால் ஊன்றி விட்டால் அதனால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே திமுக ஓரணியில் தமிழ்நாடு என்பதை துவங்கியுள்ளது. திமுக எந்த மொழிக்கும் எதிரான கட்சி அல்ல! இந்தித் திணிப்பு என்று வரும் பொழுது மட்டுமே நமக்கான உரிமை என்ற கருத்திலே அதனை எதிர்க்கிறோம். தமிழகத்திற்கான உரிமைகளை நெஞ்சை நிமிர்த்தி ஒன்றியத்தில் ஆளுபவர்களிடம் நியாயமாக கேட்கிறோமே தவிர! மற்றவர்கள் போல் நாங்கள் கூனு கும்பிடு போடவில்லை. ஒன்றிய அரசின் அடக்கு முறையை தட்டி கேட்கவே முதல்வர் ஓரணியில் தமிழ்நாடு என்ற இயக்கத்தை தொடங்கியுள்ளார் என்றார்