தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது ஆளுநர் ஆர்.என். ரவி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பல மாதங்களாக கிடப்பில் போட்டுள்ளதாக அரசியல் கட்சி தலைவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
அண்மையில் மக்களவையில் இது குறித்துப் பேசிய டி.ஆர்.பாலு `நீட் விலக்கு உள்ளிட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர் ரவியை திரும்ப பெற வேண்டும். என்றார். நாடாளுமன்றத்தில் ஆளுநரை திரும்பப் பெறக் கோரி திமுக மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சரை சந்தித்து நீட் விவகாரம் உள்ளிட்ட மசோதாக்கள் குறித்து வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி திடீர் பயணமாக இன்று காலை விமானத்தின் மூலம் டெல்லி சென்றுள்ளார். ஆளுநர் தனிப்பட்ட வேலைகளுக்காக டெல்லி சென்றிருப்பதாக ராஜ்பவன் வட்டாரத்தில் தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழக அரசின் அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில், ஆளுநரின் பயணம் உற்று நோக்கப்படுகிறது.மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஏற்கனவே டெல்லியில் தான் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசின் நெருக்கடியை சந்திக்க முடியவில்லையா ,இல்லையென்றால் புது திட்டம் எதாவது நடத்த திட்டமிடுவதற்காக ஆளுநர் டெல்லி சென்றுள்ளாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. சமீபத்தில் தான் ராம ராஜ்ஜியம் , நாடு தான் வளர வேண்டும் மாநில அரசு வளரக்கூடாது என்று ஆளுநர் ஆர் என்.ரவி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.