கோடை வெயிலின் தாக்கத்தின் காரணமாக, கட்டுமானப்பணிகளை காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை மேற்கொள்ளக்கூடாது என கட்டுப்பாடு விதித்த தமிழக அரசு இன்று அதனை திரும்பப் பெற்றுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கோடை வெப்பம் மற்றும் வெப்ப அலை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் பகல் நேரங்களில் குறிப்பாக காலை 11:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வெப்ப அலையால் நீர்ச்சத்து குறைபாட்டை தடுக்க தமிழகம் முழுவதும் உள்ள சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்களை தயார் நிலையில் வைத்திருக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
குறிப்பாக கடந்த 4ம் தேதி முதல் அக்னி நட்சத்திர வெயில் துவங்கியதால் முதல் உஷ்ண நிலை மேலும் அதிகமாகியுள்ளது. இந்த நிலை வரும் மே 28ம் தேதி வரை நீடிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையால் கட்டட பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் ஹீட் ஸ்ட்ரோக் மூலம் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.
இதனைத் தவிர்க்கும் விதமாக அதிக வெப்பம் நிலவும் காலை 10 முதல் மாலை 4 வரை அனைத்து வகை திறந்தவெளி கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள தடை விதிக்கப்படுவதாகவும் அரசு சார்பில் உத்தரவிடப்பட்டது. குறிப்பாக சென்னை மற்றும் மதுரையில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை எந்த வகையான திறந்த வெளி கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என அனைத்து கட்டுமான நிறுவனங்களுக்கும் தொழிலக பாதுகாப்பு இயக்ககம் உத்தரவிட்டிருந்தது. மேலும் சுட்டெரிக்கும் வெயிலில் கட்டுமான தொழிலாளர்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டு மே மாதம் இறுதி வரை இந்த திறந்த வெளி கட்டுமான பணிகள் நடக்காமல் இருப்பதை உறுதிப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வெயிலின் தாக்கம் குறைந்து இருப்பதால் கட்டுமானப் பணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நீக்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கட்டுமானப் பணிகள் மீதான தடையை நீக்கியது தமிழக அரசு
