சென்னை அடுத்த பொழிச்சலூரில், தமிழ்நாடு மின் அமைப்பாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த விழா, ESB சங்க ஆலோசகர் இனயாத் தலைமையில், டில்லி உண்ணாமலை, ஈ.பி. செல்வம், கோபி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக, தமிழ்நாடு அரசு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் பொன்குமார், பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ. கருணாநிதி கலந்து கொண்டு மின் அமைப்பாளர்களின் நலன் குறித்தும், அவர்களின் கோரிக்கைகள் குறித்தும் சிறப்புரையாற்றினர்.
இதில் மாநிலம் முழுவதும் இருந்து வந்த ஏராளமான மின் அமைப்பாளர்கள், சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். விழாவுக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்நாடு மின் அமைப்பாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கோவிந்தன், தமிழக அரசின் முன் 10 அம்ச கோரிக்கைகளை இந்த வெள்ளி விழா மூலம் முன்வைப்பதாக தெரிவித்தார்.
அதில் முக்கியமாக, கடந்த 28 ஆண்டுகளாக காலியாக உள்ள EB மற்றும் ESB கிரேடு உறுப்பினர் பதவிகளை உடனடியாக நிரப்ப வேண்டும்.

தமிழகத்தில் உரிமம் பெற்ற 3 லட்சம் மின் பணியாளர்கள் இருந்தும், அவர்களுக்குக் கீழ் பணிபுரியும் 4 லட்சம் தொழிலாளர்களின் பிரச்சனைகளை எடுத்துச் சொல்ல மின் வாரியத்தில் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்.
2013க்கு முன்பு வழங்கியதைப் போல, நத்தம் மற்றும் புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு எந்த வித நிபந்தனையும் இன்றி மின் இணைப்பு வழங்க வேண்டும்.
ஆண்டுதோறும் மின் கட்டண உயர்வை தவிர்த்து, 5 ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே உயர்த்தி, சிறு மற்றும் குறு தொழில்களை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், பழைய ஓய்வூதியத் திட்டம் போன்ற அறிவிப்புகள் தேர்தல் கால வாக்குறுதிகளாக மட்டுமே இருப்பதாகவும், அவை நடைமுறையில் முழுமையாக அமல்படுத்தப்படுவதில்லை என்றும் அவர் விமர்சனம் செய்தார்.




