• Fri. Nov 14th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

திராவிட இயக்க தமிழர் பேரவையில் இணையும் தமிழ்நாடு திராவிடர் கழகம்

திராவிட இயக்கத் தமிழர் பேரவையில் தமிழ்நாடு திராவிடர் கழகம் இணையும் விழா கோவையில் நாளை நடைபெறுகிறது.


ஆர்.எஸ்.புரம், மாநகராட்சி கலையரங்கத்தில் நடைபெறும் இந்த விழாவில் திமுக கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவையின் மாநில நிர்வாகி பொள்ளாச்சி மா.உமாபதி தலைமையில் கோவை மாவட்ட திமுக செயலாளர்கள் சி.ஆர்.ராமச்சந்திரன், கோவை நா.கார்த்திக், பையா ஆர்.கிருஷ்ணன், மருதமலை சேனாதிபதி, மருத்துவர் கி.வரதராஜன் முன்னிலையில் நடைபெற உள்ளது.
அமைச்சர்கள் வி.செந்தில் பாலாஜி, மு.கண்ணப்பன், பொங்கலூர் நா.பழனிசாமி, திராவிடத் தமிழர் கட்சி தலைவர் இரா.வெண்மணி, திராவிடன் அறக்கட்டளை தலைவர் கோவை பாபு வாழ்த்துரை வழங்க உள்ளனர்.


விழாவில் தமிழ்நாடு திராவிடர் கழகக் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருக்கும் காசு.நாகராசன் நோக்க உரையும், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளரான சுப.வீரபாண்டியன் நிறைவுப் பேருரையும் ஆற்ற உள்ளனர். இந்த இரு அமைப்புகளும ஏன் இணைகின்றன என்பதற்கான காரணத்தையும் விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.


அதன்படி ஒரே நோக்கம், ஒரே சிந்தனை, ஒரே கொள்கை கொண்டோர், ஒரே இயக்கமாக ஒரே தலைமையின் கீழ் இணையும் விழா என அழைப்பிதழில் பதிவிட்டுள்ளார்கள். “நம்முடைய முக்கியமான ஆசை- கொள்கை, மனித சமுதாய அமைப்பை தலைகீழாக மாற்றுவது அல்லது உடைத்தெறிவது என்பதேயாகும். அரசியலை பற்றியோ, பொருளாதாரத்தைப் பற்றியோ நமக்கு சிறதும் கவலை இல்லை.


சமூக அமைப்பை எப்படி மாற்றி அமைக்கிறோமோ எப்படி உடைத்தெறிகிறோமோ அதைப் பொருத்து அரசியலும் பொருளாதாரமும் தாமாகவே மாறுபாடு அடைந்துவிடும்” என தந்தை பெரியார் குடியரசு நாளிதழில் கடந்த 1937 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் நாள் எழுதியதை மேற்கோள் காட்டியுள்ளார்கள்.


அது போல் பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழிகளும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. அதன்படி கட்டுப்பாடும் ஒழுங்கும் கட்டாயம் நமக்குத் தேவை, இவை சாதாரணமானவைதான். ஆனால் இம்மாதிரி சாதாரண விஷயங்களை கொண்டுதான் ஒரு சமூகத்தை எடை போட முடியும் என அழைப்பிதழில் அண்ணாவின் வாசகம் அச்சிடப்பட்டுள்ளது. திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளராக இருப்பவர் சுப வீரபாண்டியன். தமிழ்நாடு திராவிடர் கழகக் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் கா.சு. நாகராஜன். தற்போது இந்த இரு அமைப்புகளும் இணைவதால் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் அமைப்புச் செயலாளராக காசு நாகராஜன் நியமிக்கப்படுகிறார். இதற்கு முன்பு கோவை ராமகிருட்டிணன் தலைமையில் பெரியார் இயக்கத்தில் பணியாற்றியவர். மேலும் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் அமைப்புச் செயலாளராக இருக்கும் திண்டுக்கல் புலேந்திரன் அந்த அமைப்பின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.