• Wed. Dec 11th, 2024

செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக தமிழ்நாடு நாள் சிறப்பு புகைப்படக் கண்காட்சி! பொதுமக்களிடையே வரவேற்பு..!

ByKalamegam Viswanathan

Jul 21, 2023

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜீலை 18 – தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு, செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புகைப்படக் கண்காட்சியினை, பொதுமக்கள் ஏராளமானோர் பார்வையிட்டு வருகின்றனர்.
இந்திய தேசம் சுதந்திரம் பெற்ற பின்பு 1950 ஜனவரி 26-ம் தேதி இந்தியா புதிய அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டு, குடியரசாக உருவெடுத்தபோது இந்தியாவில் 28 மாநிலங்கள் இருந்தன. அன்றைய தமிழ்நாடு என்பது கடலோர ஆந்திரா, ராயலசீமா, வட கேரளாவின் மலபார் பகுதி மற்றும் தென்கனராவின் பெல்லாரி ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியாகும். 1953-ல்கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதிகள் ஆந்திர மாநிலமாகப் பிரிக்கப்பட்டன. 1956 நவம்பர் 1-ல் இந்தியா முழுவதும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அப்போதைய மெட்ராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திரா கர்நாடகா மற்றும் கேரளத்தின் சில பகுதிகள் பிரிந்து சென்றன. தென்கனரா மற்றும் பெல்லாரி மாவட்டங்கள் மைசூரு மாநிலத்துடன் இணைக்கப்பட்டன. 1956-ல் மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டத்தின் மூலமாக மாநிலத்தின் எல்லைகள் மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டு மறுசீரமைப்பு செய்யப்பட்டன. தமிழ் பேசும் பகுதியான கன்னியாகுமரி முன்பு திருவிதாங்கூர்- கொச்சியின் ஒரு பகுதியாக இருந்த மெட்ராஸ் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.
1956-ல் மாநில எல்லைகளை மறு வரையறை செய்யும் சட்டத் திருத்தத்தின் மூலம் சென்னை மாகாணத்தின் மேற்கு கடற்கரைப் பகுதிகள் கேரளாவுக்கும், கர்நாடகத்துக்கும் பிரிந்து சென்றன.
வட பகுதி ஆந்திர மாநிலத்துக்குச் சென்றது. எஞ்சிய நிலப்பகுதி சென்னை மாநிலம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. சென்னை மாநிலம் என்ற பெயரை மாற்றி தமிழ்நாடு என்ற பெயரைச் சூட்ட வேண்டுமெனக் கோரி, தியாகி சங்கரலிங்கனார் 1956-ல் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.
தியாகி சங்கரலிங்கனார் 27.07.1956 முதல் 13.10.1956 வரை 76 நாட்கள் உண்ணா நோன்
பிருந்து உயிர் நீத்தார். இது தமிழக மக்களின் உள்ளத்தை உருக்கும் வரலாற்று நிகழ்வாயிற்று. அதன் பிறகு, தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டுமென்ற கோரிக்கை தீவிரமடைந்தது. பின்னர், தமிழில் ‘தமிழ்நாடு’ என்றும் ஆங்கிலத்தில் ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்றும் குறிப்பிடுவதாகத் தீர்மானிக்கப்பட்டது. 1961 பிப்ரவரி 24-ல் சட்டப்பேரவையில் இது அறிவிப்பாக வெளியிடப்பட்டது.
1967-ல் ஆட்சிப் பொறுப்பேற்ற பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையிலான அரசு மாநிலத்துக்கு ”தமிழ்நாடு” என்று பெயரைச் சூட்டத் தீர்மானித்தது. அதன்படி, 1967 ஜூலை 18-ம் தேதி இது தொடர்பான தீர்மானம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு என்று பெயரிடப்பட்ட அந்த நாள் தான் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்பட வேண்டும் என, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , சட்டப்பேரவையில் அறிவித்தார்கள். அதன்படி, தமிழ்நாடு நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக தமிழ்நாடு நாள் வரலாறு குறித்து இன்றைய இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் 18.07.2023 முதல் சிறப்பு புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இக்கண்காட்சியில், தமிழ் மொழியின் சிறப்புஇ தமிழ்நாடு மாநிலத்தின் சிறப்பு தமிழ்நாடு மாநிலம் என , பெயர் சூட்ட பாடுபட்ட பெருந்தலைவர்கள் , தியாகிகளின் புகைப்படங்கள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் , தலைமையிலான அரசின் செயல்பாடுகள் குறித்த புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. இப்புகைப்படக் கண்காட்சியினை, பொதுமக்கள் ஏராளமானோர் பார்வையிட்டு பயனடைந்து வருகின்றனர். இப்புகைப்படக் கண்காட்சி 23.07.2023-அன்று நிறைவு பெறுகிறது.