புதுக்கோட்டையில் சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான தேர்தல் பரப்புரை கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டையில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் பாலன் நகர் அருகில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு திமுக வடக்கு மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன் தலைமை வகித்தார். கனிமவளத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி அனைவரையும் வரவேற்றார். முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், எஸ். திருநாவுக்கரசர், கரூர் எம்பி ஜோதி மணி, ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி, முன்னாள் எம்எல்ஏக்கள் கவிதைப்பித்தன், பெரியண்ணன் அரசு, இளைய மன்னர் கார்த்திக் தொண்டைமான், உதயம் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் முதலில் புதுக்கோட்டை மாவட்டத்தின் ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடும் திருமயம் எஸ்.ரகுபதி, ஆலங்குடி மெய்ய நாதன், விராலிமலை கேகே செல்லபாண்டியன், புதுக்கோட்டை முத்துராஜா, கந்தர்வகோட்டை சிபிஐஎம் வேட்பாளர் சின்னதுரை, அறந்தாங்கி வேட்பாளர் டி.இராமச்சந்திரன் ஆகியோரை அறிமுகப்படுத்தினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில் தமிழ்நாட்டில் பெண்கள் மாணவர்கள் மாணவிகள் உயர்வதற்காக பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வந்திருக்கிறோம். அதன் ரிசல்ட் என்ன என்று பார்த்தால் இன்று நமது வீட்டுப் பிள்ளைகள் ஐஏஎஸ் ஐபிஎஸ் ஆகியிருக்கிறார்கள். நாம் நமது வீட்டு பெண் பிள்ளைகளை வெளியில் வேலைக்கு அனுப்பி இருக்கும் நேரத்தில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக துவங்கப்பட்டது தான் தோழியர் விடுதி. தாயுமானவர் திட்டத்தை தொடங்கியதும் வயதான முதியவர்கள் ரேஷன் கடையில் வந்து தங்களுக்கு உரிய பொருட்கள் வாங்கி செல்ல முடியாத நிலையில் அவர்கள் வீட்டுக்கு கொண்டு சென்று சேர்க்கும் வகையில் தொடங்கப்பட்டது தான் இந்த திட்டம். கேகே நகர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் நான் சென்று ஆய்வு செய்தபோது ஒரு குழந்தை சாப்பிடாமல் வந்ததாக சொன்னது. என்ன என்று விசாரித்த போது அந்த குழந்தையின் பெற்றோர் இருவரும் வேலைக்குச் சென்று விடுவதால் குழந்தைக்கு உணவு தயாரித்து கொடுக்க முடியவில்லை என்பதை அறிந்து அனைத்து சிறார்களும் மாணவர் மாணவ மாணவியரும் பயன்படும் வகையில் கொண்டு வந்ததுதான் காலை உணவுத் திட்டம். அந்த திட்டம் இனி எட்டாம் வகுப்பு வரை நீட்டிக்கப்படும்.

இவ்வளவு திட்டங்களை நான் செயல்படுத்தும் போது பொறாமையில் பழனிசாமி பேசுகிறார். இது மட்டுமல்ல இனி வரும் ஆட்சியில் இன்னும் ஏராளமான திட்டங்களை கொண்டு வர இருக்கிறேன். இப்போது இந்தியாவிலேயே வளர்ச்சி பெற்ற மாநிலமாக தமிழ்நாட்டை திராவிட மாடல் அரசு உயர்த்தி இருக்கிறது. அடுத்து வரும் ஆட்சியில் திமுக அரசு தொடங்க போகும் திட்டம் தான் சூப்பர் ஸ்டார். அதுதான் இந்த தேர்தலில் திமுக அறிக்கை.
இந்த அறிக்கையில் உள்ள ஹைலைட்டான சில விஷயங்களை சொல்ல வேண்டும். அதில் ஒன்றுதான் மகளிருக்கு வழங்கப்பட இருக்கும் எட்டாயிரம் ரூபாய்க்கான கூப்பன். மகளிர் தங்களுக்கு தேவையான வீட்டு உபயோக பொருட்களை தங்களுக்கு விரும்பிய கடைகளில் சென்று வாங்கிக் கொள்ளலாம் ஏற்கனவே இருக்கும் பொருட்களை மாற்றிக் கொள்ளலாம்.
அடுத்ததாக 20 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் பயன்பெறும் வகையில் நவீன பம்பு செட்டுகளை வழங்கப் போகிறோம். நான் முதல்வன் திட்டத்தில் பயின்றிருக்கும் ஐந்து லட்சம் மாணவர்களுக்கு மாதம் ரூபாய் 1500 உதவித் தொகையுடன் பயிற்சி வழங்கப் போகிறோம்.
நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 3500 வழங்கப்படும். கரும்பு டன் ஒன்றுக்கு 4500 ரூபாய் ஆக உயர்த்தி வழங்கப்படும். பால் கொள்முதலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ஐந்து ரூபாய் உயர்த்தி வழங்கப்படும். முதியோர் உதவித்தொகை 1200 ரூபாயிலிருந்து 2000 ரூபாயாக வழங்கப்படும்.
மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை 1500 லிருந்து 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடற்ற குடும்பத்தினர்களுக்கு 10 லட்சம் பேருக்கு வீடுகள் கட்டித் தரப்படும். இந்த ஸ்டாலின் சொன்னதைச் செய்வேன் செய்வதைச் சொல்வேன். ஏனென்றால் நான் கலைஞருடைய மகன். சொன்னதை மறக்கவும் மாட்டேன் மறுக்கவும் மாட்டேன். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி பாஜகவின் கிளைக் கழகச் செயலாளராக பணியாற்றி வருகிறார்.

அவர் தமிழ்நாட்டுக்காக எதையும் பேசவில்லை அவர் எந்தப் பிரச்சினைக்காகவும் தமிழ்நாட்டுக்காக குரல் கொடுக்கவில்லை. ஏனென்றால் அவர் பாதம் தாங்கி பழனிச்சாமி. அவருக்குக் கொள்கையும் கிடையாது கோட்பாடும் கிடையாது. அடிமை பழனிச்சாமி. அதனால்தான் அவர் சாக்கடைக்கு சமமான வார்த்தைகளைச் சொல்லி தனது தரத்தைக் குறைத்துக் கொள்கிறார். என் டி ஏ என்கிற பெயரில் பாஜகவின் கொள்கைகளை தமிழ்நாட்டுக்கு கொண்டு வருவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அடிமைதான் பழனிச்சாமி. அவர் பழனிச்சாமி அல்ல ஆமாம் சாமி, அடிமை சாமி. அதிமுக அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டு தமிழ்நாட்டுக்கும் தமிழுக்கும் துரோகம் செய்கிற என் டி ஏ கூட்டணியில் சேர்ந்திருக்கிறது. அது மட்டுமல்ல மத்திய அமைச்சர் தமிழ்நாட்டில் என் டி ஏ தலைமையில் ஆட்சி அமைய இருக்கிறது என்று கூறியிருக்கிறார் அதற்கு எடப்பாடி பழனிச்சாமி எந்த கருத்தும் சொல்லவில்லை. இங்கு வரும் மத்திய அமைச்சர்கள் அனைவரும் தேர்தல் பிரச்சாரத்தின் போது மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தி பேசுகிறார்கள்.
ஆனால் திராவிடத்தை ஏற்றுக் கொண்ட பழனிச்சாமி இதற்கு எந்தக் கருத்தும் தெரிவிப்பது கிடையாது. 2000 கோடி மட்டுமல்ல பத்தாயிரம் கோடியை கொடுத்தாலும் நாங்கள் இந்தியை திணிப்பது ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று பேசியதோடு புதுக்கோட்டை மாவட்டத்தில் போட்டியிடும் ஆறு திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். திமுக வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் நன்றி கூறினார். இந்த பொதுக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் திமுகவினரும் கூட்டணி கட்சியினரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.




