• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

வடசென்னையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை நிறுத்தி வைப்பு

Byவிஷா

Mar 28, 2024

தமிழகம் முழுவதும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்று வரும் நிலையில், வடசென்னையில் போட்டியிட உள்ள அதிமுக, திமுக வேட்பாளர்களின் வேட்புமனு பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
வட சென்னை தொகுதியில் அதிமுக சார்பாக ராயபுரம் மனோவும், திமுக சார்பாக கலாநிதி வீராசாமியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்யும் போது வட சென்னை தொகுதியில், யார் முதலில் வேட்பு மனு தாக்கல் செய்வது என்பது தொடர்பாக திமுக – அதிமுகவினர் இடையே கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், அமைச்சர் சேகர் பாபு, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் மாறிமாறி தேர்தல் அலுவலரிடம் முறையிட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து டோக்கன் வாங்கியதில் திமுக முறைகேடு செய்ததாக அதிமுக குற்றம்சாட்டியது. முறைப்படி டோக்கன் பெற்றுதான் வேட்பு மனுத்தாக்கல் செய்தோம். தோல்வி பயத்தில் அதிமுக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளதாக திமுகவினர் சார்பாக தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அப்போது திமுகவினர் அதிமுக வேட்பாளர் வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும், அதிமுகவினர் திமுக வேட்பாளர் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இரண்டு தரப்பும் மாறி, மாறி புகார் தெரிவித்ததால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக இரண்டு பேரின் வேட்புமனு பரிசீலனை நிறுத்திவைக்கப்பட்டது. அதே நேரத்தில் பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. திமுக அதிமுகவினர் இடையே வேட்பு மனு தாக்கல் அன்று வாக்குவாதம் ஏற்பட்டதை சுட்டிக்காட்டி பாஜகவினரும் தற்போது அன்றைய தினம் வேட்பு மனு தாக்கல் செய்ய தங்களுக்கு தாமதம் ஏற்பட்டதாக தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டு ஆட்சேபனை தெரிவித்து வருகின்றனர்