

திருப்போரூரில் தேர்தல் பறக்கும் படையினரால் 388 லிட்டர் மெத்தனால் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்போரூர் சட்டப்பேரவை தொகுதிகளில் தேர்தல் படை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். நேற்று முன் தினம் மாலை கிழக்கு கடற்கரைசாலை தனியார் கல்லூரி அருகே 2 டாட்டாஏஸ் வாகனத்தை நிறுத்தி பறக்கும் படையைச் சேர்ந்த கிருஷ்ணவேணி என்பவர் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படும் மொத்தனால் அந்த வாகனத்தில் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் மெத்தனால் கொண்டு செல்வதற்கான ஆவணங்களை ஆய்வு செய்தபோது அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக மெத்தனால் கொண்டு செல்வது தெரியவந்தது.
இதனையடுத்து 388 லிட்டர் மெத்தனாலை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து அவற்றை திருக்கழுகுன்றம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தினர். திருக்கழுகுன்றம் மதுவிலக்கு போலீஸார் விசாரிக்கின்றனர்.

